படபடக்கும் பட்டாம்பூச்சி பூங்கா
இறைவன் படைப்பில் உலகில் உருவான அனைத்துமே அதிசயங்கள்தான். உலகில் காணப்படும் ஆச்சரியமிக்க உயிரினப் படைப்புகளில் ஒன்று பட்டாம்பூச்சி.
முட்டையில் இருந்து புழுவாக, பூச்சியாக மாற்றமடைந்து, இறுதியில் கண்களைக் கொள்ளை கொள்ளும் வண்ணங்களுடன் பறக்கும் தன்மைக் கொண்டது, பட்டாம்பூச்சி.
இந்த அழகிய பட்டாம்பூச்சிகளை, அமீரகத்தில் பார்ப்பது மிகவும் அரிதாகும். அமீரகம் பாலைவனப்பகுதி என்பதால், பட்டாம்பூச்சிக்கு தேவையான தகவமைப்புகள் மற்றும் இயற்கை சூழல் இங்கு இல்லை. பட்டாம்பூச்சிகளுக்கு முக்கிய உணவாக இருப்பது பூக்களில் இருந்து கிடைக்கும் தேன். அந்த தேன் உருவாகும் பூச்செடிகள் வளரக்கூடிய சூழல் இல்லாததும், அமீரகத்தில் பட்டாம்பூச்சிகளை காணமுடியாததற்கு முக்கிய காரணமாகும்.
அப்படிப்பட்ட அமீரகத்தில் தான் ‘பட்டர்பிளை பார்க்’ எனப்படும் பட்டாம்பூச்சி பூங்கா இயங்கி வருகிறது. பல பகுதிகளில் இருந்து பட்டாம்பூச்சிகள் கொண்டுவரப்பட்டு, இயற்கை சமநிலையை உருவாக்கி கட்டப்பட்ட பூங்கா இதுவாகும்.
சார்ஜாவில் காலித் லகூன் என்னும் பகுதியில் உள்ளது நூர் தீவு. இங்குதான் 45 ஆயிரத்து 470 சதுரமீட்டர் பரப்பளவில் பிரமாண்ட பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றலா பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண மணல்மேடாக இருந்த இந்தப் பகுதியை, கடந்த 2015-ம் ஆண்டில் சீரமைத்து இந்தப் பூங்காவை உருவாக்கியிருக்கிறார்கள். இங்கு 150 முதல் 200 வகையான பல்வேறு நிறங்களில் உள்ள அழகிய பட்டாம்பூச்சிகளைக் காணலாம்.
இங்கு வாரந்தோறும் கூட்டுப்புழு (பப்பா) நிலையில் உள்ள 400 கூடுகள், மலேசியா நாட்டில் உள்ள பினாங் தீவின் மழைக்காடுகளில் இருந்து வரவழைக்கப்படுகிறது. கூட்டுப்புழுவாக கொண்டுவரப்படும் பட்டாம்பூச்சிகள், கம்பிகளில் வரிசையாக தொங்க விடப்படுகிறது. அதன் உடல் 86 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை அடையும்போது, முழு வடிவம் பெற்ற பட்டாம்பூச்சியாக மாற்றமடைகிறது. பிறகு அவை, அந்த பூங்கா கட்டிடத்திற்குள் சுற்றி வலம் வருகின்றன. இங்குள்ள பட்டாம்பூச்சிகள், இங்கேயே இனம்பெருக்கமும் செய்கின்றன. அதற்கான சூழ்நிலைகள் இந்தக் கட்டிடத்தில் உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவில் பட்டாம்பூச்சிகள் வாழ்வதற்கு ஏற்றவாறு 20 வகையான செடிகள் வளர்க்கப்படுகிறது. மேலும் இந்த பூங்காவின் உள்ளே வளரும் பட்டாம்பூச்சிகளுக்கு தேன் கலந்த தண்ணீர், அன்னாசி பழம் மற்றும் ஆரஞ்சு ஆகியவைகள் உணவிற்காக வைக்கப்படுகிறது. பட்டாம்பூச்சிகளுக்கு பொதுவாக நுகரும் திறன் கிடையாது. அது நுகர்வதற்கு அல்லது சோதனை செய்வதற்கு பின்னங்கால்களையே பயன்படுத்துகிறது. அதேபோல அவற்றிற்கு சுவை உணரும் நாக்கும் கிடையாது. உறுஞ்சும் குழல் போன்ற அமைப்பில் பூக்களில் உள்ள தேனை அப்படியே உறிஞ்சிக் குடிக்கிறது.
இங்குள்ள பட்டாம்பூச்சிகளில் பெரும்பாலானவை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் வகைகளாகும். இவற்றில் சாக்லேட் பான்சி, புளூ கிளேசி டைகர், ஆட்மன் லீப், காமன் ரோஸ், பீக்காக் பான்சி என்ற வகைகள் அதிகம் காணப்படுகிறது. பட்டாம்பூச்சிகளை தொடாதவரை அவை, ஒரு இடத்தில் இருந்து நகர்ந்து செல்வதில்லை. மேலும் இந்த பட்டாம்பூச்சிகளை மிக நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். ஆங்காங்கே தென்படும் மிகப்பெரிய அளவிலான பட்டாம்பூச்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகின்றன.
இந்த அல் நூர் தீவுக்கு செல்வதற்கும், பட்டாம்பூச்சி பூங்காவை பார்வையிடுவதற்கும் ஒரே கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதில் பெரியவர்களுக்கு நபர் ஒன்றுக்கு 50 திர்ஹாமும், 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு 30 திர்ஹாமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.
Related Tags :
Next Story