நெல்லை மாவட்ட அரசு பொது இ–சேவை மையங்களில் குடும்ப அட்டை எடுக்க முடியமால் பொதுமக்கள் அவதி
நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பொது இ–சேவை மையங்களில் குடும்ப அட்டை எடுக்க முடியமால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பொது இ–சேவை மையங்களில் குடும்ப அட்டை எடுக்க முடியமால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
பொது இ–சேவை மையம்
தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு அரசு பொது இ–சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இ–சேவை மையத்தின் மூலம் தான் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படுகின்ற சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா நகல் வழங்கப்படுகிறது. மேலும் பட்டா மாற்றம் செய்யவும், கூட்டுப்பட்டாவில் இருந்து பெயரை நீக்கி தனிப்பட்டாவிற்கு விண்ணப்பிக்கவும், சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படுகின்ற நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் விண்ணப்பிக்கவேண்டும். ஆதார் அட்டை நகல் எடுக்கவும், குடும்பஅட்டை(ஸ்மாட் கார்டு) நகல் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் குடும்பஅட்டையில்(ஸ்மாட்கார்டில்) பிழைகள் இருந்தால் இந்த இ–சேவை மையங்களின் மூலம் திருத்தம் செய்யப்படும். திருத்தம் செய்த சில நாட்களில் அந்த கார்டுக்கு அனுமதி வழங்கி குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் உத்தரவிடுவார். அதன் பிறகு இந்த கார்டுகளை இ–சேவை மையங்களின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்.
பொதுமக்கள் அவதி
நெல்லை மாவட்டத்தில் 26 அரசு பொது இ–சேவை மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் தற்போது குடும்பஅட்டை(ஸ்மாட் கார்டு) நகல் எடுக்கமுடியவில்லை.
குடும்பஅட்டை(ஸ்மாட் கார்டு) கொண்டு சென்றால் தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் குடும்பஅட்டை(ஸ்மாட் கார்டு) நகல் இ–சேவை மையங்களில் எடுக்கமுடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். மேலும் ஆதார் அட்டை நகலும் சில இ–சேவை மையங்களில் எடுக்கமுடியவில்லை இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இ–சேவை மைய அதிகாரி
இது குறித்து இ–சேவை மைய அதிகாரி கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில் குடும்பஅட்டை(ஸ்மாட் கார்டு) திருத்தம் அதிக அளவில் நடைபெறுவதால் சர்வர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் குடும்பஅட்டை(ஸ்மாட் கார்டு) நகல் எடுக்கமுடியவில்லை. சர்வர் பிரச்சினை சரியாகும் வரை கார்டு வழங்கப்படாது என்று நோட்டீஸ் ஒட்டுமாறு மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்து உள்ளார். இதனால் தான் நோட்டீஸ் ஒட்டி உள்ளோம். சர்வர் பிரச்சினை சரியான பிறகு இந்த கார்டு வழங்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story