வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட பூமி பூஜை அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு
கோவில்பட்டியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.8 கோடியில் 2 தளத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.8 கோடியில் 2 தளத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. இதற்கு நேற்று நடந்த பூமி பூஜையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.
அடுக்குமாடி குடியிருப்புகள்
கோவில்பட்டி ஆலம்பட்டி கிருஷ்ணா நகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில், 2.22 ஏக்கர் பரப்பளவில் ரூ.8 கோடி செலவில் 92 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜை நேற்று காலையில் நடந்தது. செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் ஆகியோர் பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.
வீட்டுவசதி வாரிய நிர்வாக பொறியாளர் ஜெயசெல்வன், உதவி நிர்வாக பொறியாளர் ஜேம்ஸ் அசோக்குமார், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மத்திய–மாநில அரசுகள் மானியம்
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில்,‘ இங்கு முதல் கட்டமாக ரூ.8 கோடி செலவில் தரைத்தளம், முதல் தளம், 2–வது தளத்துடன் கூடிய 92 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. அடுத்தகட்டமாக ரூ.10 கோடியே 44 லட்சம் செலவில் 120 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. இங்கு உடற்பயிற்சிக்கூடம், ரேஷன் கடை போன்றவையும் கட்டப்படும்.
இங்கு ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி பரப்பளவில் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்படுகிறது.
இதற்கு வீட்டுக்கு மத்திய அரசு ரூ.1½ லட்சமும், தமிழக அரசு ரூ.60 ஆயிரமும் மானியமாக வழங்குகிறது. வீட்டு வசதி வாரியத்தால் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் முதலில் ரூ.1 லட்சத்தை அரசுக்கு செலுத்த வேண்டும். பின்னர் மீதி தொகையை குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசுக்கு செலுத்த வேண்டும்’ என தெரிவித்தார்.
Related Tags :
Next Story