ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அ.குமரெட்டியபுரத்தில் 67–வது நாளாக மக்கள் போராட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அ.குமரெட்டியபுரத்தில் நேற்று 67–வது நாளாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அ.குமரெட்டியபுரத்தில் நேற்று 67–வது நாளாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் விவகாரம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று 67–வது நாளாக போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோஷம் எழுப்பினர். தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகேயும் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சில்வர்புரம் பகுதியில் பாளையாபுரம், சுப்பிரமணியபுரம், சில்வர்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் காற்றில் மாசு கலந்து இருப்பதால், மக்கள் சுவாசிக்க முடியாத நிலை இருப்பதாக கூறி நேற்று முகமூடி(மாஸ்க்) அணிந்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
இதே போன்று பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மடத்தூர், மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம், 3–வது மைல், முருகேசன்நகர், மாதவன்நகர், தபால் தந்தி காலனி, சோரீஸ்புரம் உள்ளிட்ட 16 இடங்களில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு ஆலைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
முற்றுகை
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஸ்டெர்லைட் ஆலை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கலெக்டர் அலுவலகத்திலும் மக்கள் முற்றுகையிடுவதை தவிர்ப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story