தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் குலையன்கரிசல் கிராமத்தில் சுகாதாரப்பணி
தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் தூத்துக்குடி அருகே குலையன்கரிசல் கிராமத்தில் சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடி,
தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் தூத்துக்குடி அருகே குலையன்கரிசல் கிராமத்தில் சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாம் நடந்தது.
தூய்மை பணி
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு குலையன்கரிசல் கிராமத்தில் சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நோயினால் உடல் நலம் பாதிக்கப்படும் போது, ஒரு மனிதனின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பொது மக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த முகாமில் அரசு மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனையின்படி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் ஆரோக்கியமாக வாழ முடியும். சுகாதாரம் குறித்து உங்களது நண்பர்கள், உறவினர்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு
தொடர்ந்து பொது மக்களிடம் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர்.
பின்னர் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த 30 மாணவர்கள், செவிலியர் பள்ளியை சேர்ந்த 20 மாணவிகள், 20 பயிற்சி மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் குலையன்கரிசல் கிராமத்தில் வீடு, வீடாக சென்று சுகாதாரப்பணிகளை மேற்கொண்டனர்.
யார்–யார்?
நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் லலிதா, துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, நலக்கல்வியாளர்கள் கணேசன், சங்கரசுப்பு, சமூகம் சார்ந்த மருத்துவத்துறை மருத்துவர்கள் சார்லஸ் பொன் ரூபன், ராஜசேகர், சமூக நல பணியாளர் லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story