மக்கள் தொடர்பு முகாமில் 242 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


மக்கள் தொடர்பு முகாமில் 242 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 20 April 2018 3:30 AM IST (Updated: 19 April 2018 11:04 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.பிள்ளையார்பட்டியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 242 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லதா வழங்கினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.பிள்ளையார்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் லதா தலைமை தாங்கி கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் அரசின் திட்டங்கள் முழுமையாக கிராமப் பகுதிகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதே ஆகும். அதன் அடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு உரிய தீர்வு காணப்படுகின்றன. மேலும் மாதம் ஒருமுறை ஒரு கிராமத்தில் கலெக்டர் தலைமையிலும், வருவாய் அலுவலர் தலைமையிலும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பொது சுகாதாரம் மற்றும் மாவட்ட நிர்வாகம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இணைந்து படித்த பட்டதாரிகளுக்கு தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டதுடன், அந்த அரங்குகளை பொதுமக்கள் பார்த்து பயன்பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் பல்வேறு துறைகளின்கீழ் 242 பேருக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் இளங்கோ, கால்நடைப் பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் கருணாகரன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் திலீப்குமார், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் பழனீசுவரி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் விஜயன், திருப்பத்தூர் தாசில்தார் சுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story