மத்திய அரசின் நிதி கிடைக்காததால் புதுவையில் வேகமாக வளர்ச்சி இல்லை


மத்திய அரசின் நிதி கிடைக்காததால் புதுவையில் வேகமாக வளர்ச்சி இல்லை
x
தினத்தந்தி 20 April 2018 3:30 AM IST (Updated: 20 April 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

சிறிய மாநிலங்களில் முதலிடம் பெற்றும் மத்திய அரசின் நிதி கிடைக்காததால் புதுவையில் வேகமாக வளர்ச்சி இல்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி, 

புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கல்லூரியின் வளர்ச்சிக்காக முதல்வர் குமரன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புதுவை அரசு கல்விக்கு முதலிடம் அளித்து வருகிறது. கல்வியால் மட்டுமே ஒரு சமுதாயம் வளர்ச்சி பெற முடியும், வாழ்க்கை மேம்படும் என்பது தான் இதற்கு காரணம். புதுச்சேரியில் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த கட்டுமானப்பணி மற்றும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அமைச்சர் கமலக்கண்ணன் பாடுபட்டு வருகின்றார்.

படித்து பட்டம் பெறுவது வேலைவாய்ப்பு பெறுவதற்காக மட்டும் இல்லாமல் விளையாட்டு, கலை போன்ற பிற துறைகளை வளர்த்துக்கொண்டால் உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். சிறிய மாநிலங்களில் புதுச்சேரி கல்வியில் முதல் இடத்தில் உள்ளது. புதுச்சேரி தாகூர் மற்றும் இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்திய அளவில் 100 முதல் 150 இடங்களுக்குள் உள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை மூலம் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அதனால் தற்போது தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது. கல்லூரிகளுக்காக 2017-ம் ஆண்டில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கினோம். அதில் ரூசா திட்டத்தின்கீழ் இந்த கல்லூரிக்கு கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது மத்திய அரசு ரூசா திட்டத்தில் தரும் நிதியை மாற்றி அமைத்துவிட்டது. ஆனாலும் வரும் பட்ஜெட்டில் இந்த கல்லூரி கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கி கட்டுமானப்பணி தொடங்கி விரைவில் முடிக்கப்படும்.

இந்த கல்லூரியில் உள்ள 5 பாடப்பிரிவுகளும் படித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய நல்ல பிரிவுகளாகும். இந்த கல்லூரியில் எம்.காம்., பி.ஏ.பிரெஞ்சு ஆகிய படிப்புகளை தொடங்க அனுமதி கேட்டு பல்கலைக் கழகத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் அந்த படிப்புகள் தொடங்கப்படும்.

புதுச்சேரி அரசு நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு, சுற்றுலா, கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் முதல் இடத்தில் உள்ளது. மக்கள்நல திட்டங்களை நிறைவேற்றுவதிலும் முதல் இடத்தில் உள்ளோம். இருப்பினும் மத்திய அரசிடம் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காததால் மாநிலத்தில் வேகமான வளர்ச்சி இல்லை. நமது அரசு வரிவருவாய், சிக்கன நடவடிக்கை மூலம் மாநிலத்தின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்கள் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற தேர்வுகளை எழுதி அதில் வெற்றி பெற்று அரசின் உயர்ந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும். மேலும் சொந்தமான தொழில் செய்யவும் முன்வர வேண்டும்.

விழாவில் ஜெயபால் எம்.எல்.ஏ., உயர்கல்வித்துறை பொறுப்பாளர் பலராம், கல்லூரி முதல்வர் குமரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Next Story