தேர்வு எழுத அனுமதிக்கவில்லை: என்ஜினீயரிங் கல்லூரி மீது கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் புகார்


தேர்வு எழுத அனுமதிக்கவில்லை: என்ஜினீயரிங் கல்லூரி மீது கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் புகார்
x
தினத்தந்தி 20 April 2018 4:30 AM IST (Updated: 20 April 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

தேர்வு எழுத அனுமதிக்கவில்லை எனக்கூறி என்ஜினீயரிங் கல்லூரி மீது கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் ஒருவர் புகார் மனு கொடுத்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலை அடுத்த வில்லுக்குறி அருகே உள்ள கொன்னக்குழிவிளை பகுதியை சேர்ந்தவர் பொன்.ராகேஷ். இவர் நேற்று தன்னுடன் படிக்கும் நண்பர்கள் மற்றும் ஊரை சேர்ந்தவர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. (சிவில்) படித்து வருகிறேன். என்னுடைய தாயார் அரசு ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நான் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு, கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை முறையாக செலுத்தி வருகிறேன்.

இதற்கிடையே எனது வகுப்பில் பாடம் கற்பிக்கும் பேராசிரியர் கடந்த மாதம் வகுப்புக்கு காலதாமதமாக சென்றேன் என்று கூறி என்னையும், எனது குடும்பத்தையும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசினார். இதனால் பேராசிரியருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை காரணம் காட்டி என்னை கடந்த 14-3-2018 முதல் 29-3-2018 வரை வகுப்பில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்தார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நான், தற்காலிக இடைநீக்க நாட்கள் முடிந்து, நன்றாக படிக்க வேண்டும் என்ற உறுதியுடன் கல்லூரிக்கு சரியான நேரத்துக்கு சென்று வந்தேன்.

தற்போது 6-வது செமஸ்டர் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு மட்டும் “ஹால்டிக்கெட்“ வரவில்லை. கல்லூரி நிர்வாகத்திடம் நான் கேட்டபோது கல்லூரிக்கு அபராத தொகையாக ரூ.45 ஆயிரம் செலுத்தினால்தான் ஹால்டிக்கெட் கிடைக்கும் என்று கூறினார்கள். கல்லூரிக்கும், பல்கலைக்கழகத்துக்கும் செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தி தானே பயின்று வருகிறேன் என்று கூறினேன். அப்போது கல்லூரி வருகை நாட்கள் குறைவாக உள்ளது. அதனால் நீ தேர்வு எழுத முடியாது என்று கூறி அனுப்பி விட்டனர். கல்லூரிக்கு நான் ஒழுங்காக சென்றுள்ளேன்.

ஆனால் பேராசிரியருக்கும், எனக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக என்னை தேர்வு எழுத விடாமல் என் எதிர்காலத்தை பாழாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கல்லூரி நிர்வாகம் என்னை பழிவாங்குகிறது. இதனால் நானும், என் சகோதரருடன் கல்லூரிக்கு சென்று கல்லூரி முதல்வரிடம் முறையிட்டோம். ஆனால் கல்லூரி முதல்வரும், பேராசிரியரும் எங்களை தகாத வார்த்தைகளால் பேசி அனுப்பி விட்டனர். ஆகவே நான் மிகுந்த மன உளைச்சல் அடைந்து எனது எதிர்காலம் பாழாகிவிடுமோ என எண்ணி தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளேன். எனவே நடப்பு கல்வியாண்டில் நான் தேர்வு எழுத அனுமதி பெற்றுத்தர கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story