விக்கிரவாண்டி அருகே 108 ஆம்புலன்ஸ் மீது லாரி மோதல்


விக்கிரவாண்டி அருகே 108 ஆம்புலன்ஸ் மீது லாரி மோதல்
x
தினத்தந்தி 20 April 2018 3:45 AM IST (Updated: 20 April 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே 108 ஆம்புலன்ஸ் மீது லாரி மோதிய விபத்தில் கர்ப்பிணி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

விக்கிரவாண்டி

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 35). இவருடைய மனைவி அலமேலு (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தற்போது அலமேலு 3-வது முறையாக கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவரை பிரசவத்திற்காக நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து 108 ஆம்புலன்சை வரவழைத்து, அதன் மூலம் அலமேலுவை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்று கொண்டிருந்தனர். அவருடன் அந்த ஆம்புலன்சில் செல்வராஜ், இவருடைய மகன் சுதன், உறவினர்கள் கிட்டை, குமாரி ஆகியோரும் உடன் சென்றனர். ஆம்புலன்சை கள்ளக்குறிச்சி கொட்டியம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் முருகன் ஓட்டிச்சென்றார்.

இந்த ஆம்புலன்ஸ் நேற்று அதிகாலை 3 மணியளவில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே சென்றபோது அந்த நேரத்தில் பின்னால் வந்த லாரி, கண் இமைக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ் மீது மோதியது.

இந்த விபத்தில் ஆம்புலன்சின் பின்பகுதி சேதமடைந்தது. ஆம்புலன்சில் இருந்த கர்ப்பிணி அலமேலு, அவரது கணவர் செல்வராஜ், மகன் சுதன், உறவினர்கள் கிட்டை, குமாரி மற்றும் லாரி டிரைவரான காரைக்குடி அருகே தோகமலையை சேர்ந்த முத்துக்குமரன் ஆகிய 6 பேரும் படுகாயமடைந்தனர்.

உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story