சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் இன்று நடக்கிறது


சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 20 April 2018 4:00 AM IST (Updated: 20 April 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் இன்று நடைபெறுகிறது. இதற்காக தெப்பக்குளத்தில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்றது.

சமயபுரம்,

திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை அம்மன் பல்லக்கிலும், இரவில் வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று காலை பல்லக்கிலும், இரவில் முத்து பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத்தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இன்று மதியம் 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார். அங்கு மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

தண்ணீர் நிரப்பும் பணி

கடந்த ஆண்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்தாண்டு தெப்ப உற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதற்கிணங்க கோவில் நிர்வாகம் சார்பில் திருச்சி காவிரி ஆற்றில் கொண்டையம்பேட்டையில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, நேற்று காலை முதல் இரவு வரை குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்றது. 

Next Story