வேப்பூர் அருகே பயங்கரம் மரத்தில் கார் மோதல்
வேப்பூர் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் மளிகை கடைக்காரர் மனைவி உள்பட 3 பேர் பலியாகினார். மேலும் இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
வேப்பூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியை சேர்ந்தவர் சரவணன். இவர் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 42). கணவன்- மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணனுக்கும், ஜெயந்திக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் கோபித்துக் கொண்ட ஜெயந்தி, சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக ஒரு பஸ்சில் ஏறி சேலத்துக்கு சென்றார். பின்னர் சேலம் பஸ் நிலையத்தில் இருந்து தனது மகன் பாலாஜியை(21) செல்போனில் தொடர்பு கொண்டு, நான் சேலத்துக்கு வந்து விட்டேன் என்று கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாலாஜி அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர்களுடன் ஒரு காரில் சேலத்துக்கு சென்றார். அங்கு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஜெயந்தியை அவர்கள் சமாதானப்படுத்தி, மீண்டும் காரில் புவனகிரிக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். காரை புவனகிரியை சேர்ந்த அமுதகணேசன் மகன் சந்தோஷ்குமார்(31) என்பவர் ஓட்டினார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் கடலூர் மாவட்டம் சேலம்-கடலூர் சாலையில் வேப்பூர் கூட்டுரோடு அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடியது. இதில் பதறிய பாலாஜி மற்றும் அவருடன் வந்தவர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். இந்நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக அந்த கார், சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் கார் டிரைவர் சந்தோஷ்குமார், சேகர்(31) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஜெயந்தி, பாலாஜி, அருள்மொழி(21), குணசீலன்(25), குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வெங்கடேசன்(45) ஆகியோர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த ஜெயந்தி உள்ளிட்டோரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலாஜி, அருள்மொழி, குணசீலன், வெங்கடேசன் ஆகிய 4 பேருக்கும் டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்தில் பலியான சந்தோஷ்குமார், சேகர் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விபத்து குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரத்தில் கார் மோதி ஒரே ஊரைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story