அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும்


அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும்
x
தினத்தந்தி 21 April 2018 3:45 AM IST (Updated: 21 April 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

அமைப்புசாரா தொழிலாளர்கள், நலவாரியத்தில் சேர்ந்து பயன்பெற முன்வர வேண்டும் என்று அதிகாரப்பட்டியில் நடந்த சிறப்பு முகாமில் உதவி ஆணையர் இந்தியா பேசினார்.

பொம்மிடி,

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் தொழிலாளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இந்த முகாமை சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் இந்தியா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் அவர் பேசுகையில், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதோடு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் மூலம் பயன்பெற தொழிலாளர்கள் முன்வரவேண்டும். நலவாரியத்தில் இதுவரை பதிவு செய்து அடையாள அட்டைகளை பெறாதவர்கள் உடனடியாக பதிவை மேற்கொள்ள விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த சிறப்பு முகாமில் அதிகாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த 277 தொழிலாளர்கள் கலந்து கொண்டு நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பங்களை அளித்தனர். இதேபோல் ஏற்கனவே நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்கள் பதிவை புதுப்பித்து கொள்ள உரிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதன்படி 145 தொழிலாளர்கள் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வழங்கினார்கள்.

பதிவிற்கான விண்ணப்பங்களும் ஓய்வூதியத்திற்கான ஆயுள் சான்று விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இச்சிறப்பு முகாமில் அதிகாரப்பட்டி கிராமநிர்வாக அலுவலர் நித்யா கலந்து கொண்டு பதிவு விண்ணப்பங்களை சரிபார்த்து உரிய சான்றிதழ்களை வழங்கினார். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை துறை சார்ந்த அலுவலர்கள் செய்து இருந்தனர்.

Next Story