தனியார் பள்ளி சங்கங்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்


தனியார் பள்ளி சங்கங்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 April 2018 4:00 AM IST (Updated: 21 April 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து தரவரிசைப்படி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளி சங்கங்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

தர்மபுரி,

தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு தற்போது ஏற்கனவே பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணங்களில் சுமார் 10 சதவீதம் மட்டுமே உயர்த்தி வழங்கி உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளத்தை தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும் வழங்க வேண்டி உள்ளதால் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து தரவரிசையின்படி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். கட்டண நிர்ணயக்குழுவில் தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிந்துவிட்ட நிலையில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் தகுதியை மேம்படுத்தி கொள்ள பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்தில் கோடைகால சிறப்பு வகுப்புகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும். தொடர் அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கும் பள்ளிகளுக்கு 5 ஆண்டுகள் வரை தொடர் அங்கீகாரம் வழங்கவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு நகர்,ஊரமைப்புதுறை அனுமதி பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கும் முறையை பின்பற்ற வேண்டும்.

கல்வி நிறுவன கட்டிடங்களுக்கான சொத்துவரி தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இலவச ஒதுக்கீட்டில் சேரும் மாணவ-மாணவிகளுக்கான ஈட்டுத்தொகையை பள்ளிகளுக்கு காலதாமதமின்றி அந்த கல்வியாண்டிலேயே பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணங்களை தாமதமின்றி அந்த கல்வி ஆண்டிலேயே வழங்க வேண்டும்.

2018-2019-ம் கல்வி ஆண்டு தொடங்கும் நிலையில் புதிய பாடத்திட்டங்களுக்கான பயிற்சி வகுப்புகளை தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் நடத்த வேண்டும். புதிய பாடத்திட்டம், தேர்வு முறை சீர்திருத்தம் மற்றும் பாடபுத்தகங்கள் தயாரிப்பு தொடர்பான பணிகளில் அரசுக்கு உதவிட அமைக்கப்படும் கல்வியாளர்கள் ஆலோசனைக்குழுவை அரசு உடனே நியமிக்க வேண்டும். அந்த குழுவில் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்புக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். பள்ளிகளுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story