மாவட்டம் முழுவதும் 30 அரசு பள்ளிகளில் பாடப்பிரிவுகள் நீக்கம்?
மாவட்டம் முழுவதும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள 30 அரசு பள்ளிகளில் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்யும் சூழல் உருவாகி உள்ளது.
தேனி,
முதுகலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர்கள் மேல்நிலை வகுப்புகளில் 28 பாடவேளைகள் கற்பிக்க வேண்டும். தற்போது மாநில கணக்காயர் தணிக்கையில், முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் அரசாணையில் தெரிவித்துள்ளவாறு போதிய பாடவேளைகள் பணியாற்றாததால் அரசுக்கு பெரும் நிதி இழப்பீடு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். இந்நிதி இழப்பீட்டை தவிர்க்கும் வகையில் போதிய பாடவேளை இன்றி உள்ள முதுகலை ஆசிரியரை கீழ்நிலை வகுப்புகளுக்கு (9, 10-ம் வகுப்பு) கற்பிக்க பாடவேளை ஒதுக்க வேண்டும்.
மேல்நிலைப் பிரிவுகளை பொறுத்தவரை பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி அல்லது மாநகராட்சி பகுதியாக இருந்தால் பாடப்பிரிவுக்கு குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஊரகப் பகுதியாக இருந்தால் குறைந்தபட்ச மாணவர்கள் எண்ணிக்கை 15 ஆகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேல்நிலைப்பிரிவில் 60 மாணவர்கள் வரை ஒரு பிரிவாக கணக்கிடப்படும். 61-ல் இருந்து 100 மாணவர்கள் வரை அடுத்த பிரிவாக கணக்கிடப்படும். ஒவ்வொரு கூடுதல் 40 மாணவர்களுக்கு அடுத்த பிரிவு கணக்கிடப்படும்.
இதுபோன்ற தெளிவுரைகளை பின்பற்றி கடந்த 1-8-2017 அன்றுள்ள நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்து வகை அரசு, அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்பான பணியாளர் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுத்தப்பட்டு உள்ளது.
இந்த சுற்றறிக்கை குறித்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அலுவலர்களிடம் கேட்ட போது, ‘சில மாதங்களுக்கு முன்பே வாய்மொழியாக இதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டு இருந்தன. மாணவர்கள் எண்ணிக்கை குறைவான பள்ளி என்று எடுத்துக் கொண்டால் ஹைவேவிஸ் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு குறைந்த மாணவர்களே உள்ளதால் அங்கு பாடப்பிரிவுகள் பறிபோக வாய்ப்புள்ளது. அதேபோல், மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளுக்கு மாணவ-மாணவிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த பள்ளிகளில் பாடப்பிரிவுகள் நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு பள்ளிகளையும் தொடர்பு கொண்டு இந்த பட்டியலை சரிபார்க்கும் பணி நடக்கிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் வருகிற 26, 27-ந்தேதிகளில் சென்னையில் நடக்கும் கூட்டத்தில் இந்த பட்டியல் சமர்ப்பிக்கப்படும். அங்கு பட்டியல் இறுதி செய்யப்படும்’ என்றனர்.
Related Tags :
Next Story