திருச்சியில் ரெயில் மறியல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து


திருச்சியில் ரெயில் மறியல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து
x
தினத்தந்தி 21 April 2018 4:00 AM IST (Updated: 21 April 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற பெண்கள் உள்பட 290 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்திந்திய உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கண்டோன்மெண்ட் போலீஸ் சரக உதவி கமிஷனர் சச்சிதானந்தம் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலைய போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்களும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக மத்திய பஸ் நிலையம் அருகே இருந்து அனைத்திந்திய உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜோதிகுமார் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் தண்டாயுதபாணி, மகளிர் அணி செயலாளர் நாச்சிசேகர், தென் மண்டல அமைப்பு செயலாளர் சந்திரசேகர் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்தனர். இவர்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக ஊர்வலமாக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் நோக்கி வந்தனர்.

அப்போது அவர்களை ரெயில் நிலைய வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்கள் ரெயில் நிலையம் முன்பு அமர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் கலைந்து போகவில்லை என்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர். அப்போது அவர்கள் அங்கிருந்து ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர் களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 230 பெண்கள் உள்பட 290 பேரை போலீசார் கைது செய்து, வேன்களில் ஏற்றி கருமண்டபம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கு ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வந்திருந்தனர். இதில் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் மூதாட்டிகள் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பியதை காண முடிந்தது.

முன்னதாக ஜோதிகுமார் நிருபர்களிடம் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். அதன்படி நாளை (இன்று) திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயற்சி செய்யும் போராட்டம் நடத்தப்போகிறோம்.

மேலும் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்றார்.

Next Story