தீக்குளிக்க முயன்ற 2 திருநங்கைகள் கைது


தீக்குளிக்க முயன்ற 2 திருநங்கைகள் கைது
x
தினத்தந்தி 21 April 2018 3:45 AM IST (Updated: 21 April 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற 2 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் வீதியை சேர்ந்தவர் ஓவியா (வயது 22). திருநங்கை.

இவர் நேற்று காலை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் மனு கொடுப்பதற்காக வந்தார். அவருடன் திருநங்கை அனுவும் உடன் வந்தார்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நின்றிருந்த ஓவியா திடீரென தான் மறைத்து வைத்து இருந்த பெட்ரோல் கேனை எடுத்தார். உடனடியாக அவர் தீக்குளிப்பதற்காக பெட்ரோலை தனக்குத்தானே ஊற்றிக்கொண்டார். அதே கேனை அனுவும் வாங்கி தன்னுடைய உடலில் பெட்ரோலை ஊற்றினார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் பெட்ரோல் கேனை அனுவிடம் இருந்து பிடுங்கினார்கள். பெட்ரோல் ஊற்றிக்கொண்ட அவர்கள் 2 பேர் மீது போலீசார் தண்ணீரை ஊற்றினார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பிறகு தீக்குளிக்க முயன்ற ஓவியாவையும், அனுவையும் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது திருநங்கை ஓவியா போலீசாரிடம் கூறியதாவது:-

எனது தம்பியை சித்தோடு போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்தனர். தம்பியிடம் இருந்து செல்போனையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து வைத்து உள்ளனர். எனவே மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் கொடுக்கும்படி சித்தோடு போலீசாரிடம் சென்று கேட்டதற்கு, என்னை போலீசார் தரக்குறைவாக பேசினார்கள். எனவே அந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து திருநங்கைகள் ஓவியா, அனு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திருநங்கைகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story