தலைமறைவான மாவோயிஸ்டுகளின் படங்களை வெளியிட்ட வால்பாறை போலீசார்


தலைமறைவான மாவோயிஸ்டுகளின் படங்களை வெளியிட்ட வால்பாறை போலீசார்
x
தினத்தந்தி 21 April 2018 5:15 AM IST (Updated: 21 April 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

தலைமறைவான மாவோயிஸ்டுகளின் படங்களை வால்பாறை போலீசார் வெளியிட்டனர். மேலும் சுற்றுலா பயணிகள் போர்வையில் அவர்கள் யாரும் நுழையாமல் இருக்க தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

வால்பாறை,

தமிழக-கேரள எல்லை பகுதிகளில் சுற்றித்திரியும் மாவோயிஸ்டுகளை பிடிக்க அதிரடி படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். வால்பாறை பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவாமல் இருக்க கடந்த 2 ஆண்டுகளாக தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாவோயிஸ்டுகளை கண்காணிக்க வாட்டர்பால், சேக்கல்முடி, முடீஸ் ஆகிய போலீஸ் நிலையங்களில் கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வால்பாறை போலீசார் தலைமறைவான மாவோயிஸ்டுகளின் படங்களை வெளியிட்டு உள்ளனர். இதில் ஆண்கள் மாவோயிஸ்டுகளில் கர்நாடகாவை சேர்ந்த விக்ரம் கவுடா, சுரேஷ், ஜெயன்னா, கிருஷ்ணமூர்த்தி, கேரளாவை சேர்ந்த சோமன், மொய்தீன், ராஜீவன், தமிழகத்தை சேர்ந்த கார்த்திக், மணிவாசகம், தனிஷ், சந்துரு, சந்தோஷ் மற்றும் எந்த மாநிலம் என்று குறிப்பிடாமல் தீபக், வேல்முருகன், யோகேஷ் மதன் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.

பெண் மாவோயிஸ்டுகள் பட்டியலில் கர்நாடகாவை சேர்ந்த சுந்தரி, வனலட்சுமி, சாவித்திரி, லதா, ஸ்ரீமதி, ஷோபா, பிரபா, கேரளாவை சேர்ந்த உன்னியர்சா, தமிழகத்தை சேர்ந்த உமா, எந்த மாநிலம் என்று குறிப்பிடாமல் சர்மிளா, கவிதா, பிரசன்னா, ஜெசா ரெஜன்னி ஆகியோர் புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளன. இவர்கள் பற்றிய விவரம் தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தற்போது கோடை விடுமுறை காலம் தொடங்கி இருப்பதால் வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். இதனால் தலைமறைவான மாவோயிஸ்டுகள் சுற்றுலா பயணிகள் போர்வையில் நகருக்குள் நுழைந்து விட கூடாது என்பதற்காக அட்டகட்டி, சோலையார் நகர் பகுதியில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் வனத்துறையினருடன் சேர்ந்து போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வால்பாறைக்குள் வரும் மற்றும் நகரை விட்டு வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. வாகனங்களில் செல்பவர்கள் ஆயுதங்கள் ஏதேனும் கடத்தி செல்கிறார்களா? என்று அவர்கள் வைத்திருந்த உடைமைகளை போலீசார் பரிசோதித்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி வால்பாறையில் ஏராளமான தேயிலை எஸ்டேட்டுகள் இருப்பதால் தொழிலாளர்கள் போர்வையில் மாவோயிஸ்டுகள் யாரேனும் நுழைந்து விட கூடாது என்பதற்காகவும் தலைமறைவான மாவோயிஸ்டுகளின் படங்களை காண்பித்து அடையாளம் தெரிந்தால் தகவல் தெரிவிக்கவும் அறி வுறுத் தப்பட்டு உள்ளது. இதே போல் தங்கும் விடுதிகள், காட்டேஜ் உரிமையாளர்களிடமும் சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் மாவோயிஸ்டுகள் நுழைந்து விடாமல் இருக்க நடவடிக்கை எடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story