ராமநாதபுரத்தில் நூதன முறையில் கடைகளில் ரூ.80 ஆயிரம் திருட்டு


ராமநாதபுரத்தில் நூதன முறையில் கடைகளில் ரூ.80 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 21 April 2018 3:15 AM IST (Updated: 21 April 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நூதன முறையில் கடைகளில் ரூ.80 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்தவர் கார்மேகம்(வயது 60). இவர் பட்டணம்காத்தான் பகுதியில் சிமெண்டு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள் கார்மேகத்திடம் அவரின் அண்ணன் சோதனை சாவடி பகுதியில் விபத்தில் அடிபட்டு கீழே கிடப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அலறியடித்துக்கொண்டு கார்மேகம் அவசர அவசரமாக சென்று பார்த்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.50,000 ரொக்கத்தை திருடிக்கொண்டு சென்றுவிட்டனர். சோதனை சாவடி பகுதியில் தேடிப்பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் திரும்பி வந்த கார்மேகம் பணம் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தன் கவனத்தை திசை திருப்பி நூதனமாக பணத்தை திருடிச்சென்றிருப்பதை அறிந்த அவர் இதுகுறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்தார்.

இதேபோல ராமநாதபுரம் ஆதம்நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரவேல்(43). இவர் ராமநாதபுரம் ரெயில்வேகேட் பகுதியில் மின்வாரிய அலுவலகம் எதிரே செங்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இங்கு வந்த 2 மர்ம நபர்கள் பழைய பஸ் நிலையம் பகுதியில் 2 பேர் விபத்தில் அடிபட்டு காது மற்றும் மூக்கில் ரத்தம் வருவதாகவும், உங்களிடம் தகவல் சொல்லுமாறும் தெரிவித்தார்கள் என்று கூறியுள்ளனர். இதனால் யாருக்கு என்ன ஆனதோ என்று அலறியடித்து கொண்டு அவசரம் அவசரமாக சுந்தரவேல் ஓடிச்சென்றுள்ளார்.

இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் நைசாக அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.30,000 ரொக்கத்தை திருடிக்கொண்டு சென்றுவிட்டனர். பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் என்று அலைந்து திரிந்து பார்த்துவிட்டு விபத்து எதுவுமே நடக்கவில்லை என்பதை அறிந்து திரும்பி வந்த சுந்தரவேல் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நூதன முறையில் குடும்பத்தினருக்கு விபத்து என்று கூறி உணர்ச்சிவசப்படுத்தி கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்துள்ள இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story