நடமாடும் வாகனம் மூலம் மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள் விற்பனை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்
நடமாடும் வாகனம் மூலம் மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள் விற்பனையை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
சேலம்,
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிராம சுவராஜ் அபியான் என்ற திட்டத்தில் ‘உஜாலா‘ மற்றும் சவுபாக்கியா ஆகிய திட்டங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், சேலம் மின் பகிர்மான வட்டம் சார்பில் மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள், வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
முதல் கட்டமாக வருகிற மே 5-ந் தேதிவரை நடமாடும் வாகனம் மூலம் மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள் விற்பனை தொடங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி நேற்று சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டது.
எல்.இ.டி. பல்புகள் முதல் விற்பனையை தொடங்கி வைத்த கலெக்டர் ரோகிணி, நடமாடும் வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், சித்ரா, மனோன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் மணிவண்ணன்(சேலம்), ஜோதிநாதன்(மேட்டூர்), செயற்பொறியாளர்கள் குணவர்த்தினி, மவுலீஸ்வரன், சசிசேகரன், குணசேகரன், செல்வகுமார், பாலசுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் பரிமளா தேவி, ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் அருள்ஜோதி அரசன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உஜாலா, சவுபாக்கியா ஆகிய இரு திட்டங்கள் சேலம் மாவட்டத்தில் மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, சின்னசாத்தப்பாடி, தாத்தையம்பட்டி, கருப்பனம்பட்டி, செக்காரப்பட்டி, செல்லப்பம்பட்டி, அதிகாரிப்பட்டி, கூட்டாத்துப்பட்டி, மின்னாம்பள்ளி, காரிப்பட்டி, எம்.பெருமாம்பாளையம், மேட்டுடையாம்பாளையம், புத்திரக்கவுண்டம்பாளையம், புங்கவாடி, இலுப்பநத்தம், கவர்பனை ஆகிய கிராமங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் செம்மாண்டப்பட்டி கிராமத்திலும் தொடங்கப்பட்டுள்ளது.
உஜாலா திட்டத்தில் மானிய விலையில் 9 வாட்ஸ் எல்.இ.டி. பல்புகள் ரூ.50-க்கு நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாகனமானது மே 5-ந் தேதி வரை சுற்றுப்பயணம் செய்யும். அந்த வாகனங்களில் பொதுமக்கள் ஆதார் அட்டை நகலினை கொடுத்து நேரடியாக அதை பெற்றுக்கொள்ளலாம். அனைத்து பஞ்சாயத்துகளில் 100 சதவீதம் எல்.இ.டி. பல்புகள் பயன்பாட்டை கொண்டுவருவதே நோக்கம் ஆகும். இதன் மூலம் மின்சாரம் 80 சதவீதம்வரை சேமிக்க முடியும்.
சவுபாக்கியா திட்டத்தில் மின் இணைப்பு இல்லாத தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் வீடுகளுக்கு இலவசமாக மின் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டத்தில் மின் இணைப்பு பெற, உரிய விண்ணப்ப படிவத்துடன் சாதி சான்றிதழ் நகலினை இணைத்து அருகில் உள்ள பிரிவு அலுவலகத்தில் அளித்து மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story