மருத்துவ பட்ட மேற்படிப்பு கட்டண விவகாரம்: ஏழை மாணவர்கள் கல்லூரிகளில் சேர அரசு உதவவில்லை, கவர்னர் கிரண்பெடி குற்றச்சாட்டு


மருத்துவ பட்ட மேற்படிப்பு கட்டண விவகாரம்: ஏழை மாணவர்கள் கல்லூரிகளில் சேர அரசு உதவவில்லை, கவர்னர் கிரண்பெடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 April 2018 4:30 AM IST (Updated: 21 April 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ பட்ட மேற்படிப்பு கட்டண விவகாரத்தில் ஏழை மாணவர்கள் கல்லூரியில் சேர அரசு உதவவில்லை என்று கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ உயர்கல்வி கட்டணம் தொடர்பாக ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பில், மாணவர்களிடம் ரூ.10 லட்சம் கட்டணமாக பெற்றுக்கொண்டு கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிகர்நிலை பல்கலைக்கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஐகோர்ட்டு கூறியபடி ரூ.10 லட்சம் கட்டணத்தில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இது தொடர்பாக வேறு உத்தரவு வேண்டும் என்றால் ஐகோர்ட்டிலேயே மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இதையொட்டி சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவையில் செயல்படும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வசூலிக்கும் கல்வி கட்டணம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்து உள்ளது. உயர்கல்வி கற்க விருப்பம் இருந்தும் வசதி இல்லாத மருத்துவ மாணவர்களின் உதவிக்கு புதுவையில் உள்ள அரசியல் கட்சிகளோ, அரசோ முன்வரவில்லை.

இந்த பிரச்சினையில் கவர்னர் மாளிகை நேரடியாக தலையிட்டு அவர்களுக்கு உரிய நீதியை பெற்று தந்துள்ளது. இதன் மூலம் புதுவை யூனியன் பிரதேச வரலாற்றில் கவர்னர் மாளிகை தனித்தன்மையை சுட்டிக்காட்டியுள்ளது. உயர்கல்வியை பெற விரும்பிய மருத்துவ மாணவர்களின் பெற்றோர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்ற நேரத்தில் கவர்னர் மாளிகை அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது.

இந்த விஷயத்தில் புதுவை அரசின் அலட்சியம், அக்கறை இன்மை கவர்னர் மாளிகையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டி கவர்னர் மாளிகையில் இருந்து பிரதமருக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. மேலும் நேரடியாக சென்று பிரதமரை சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது. இந்த கூட்டு கொள்ளையில் ஈடுபடும் மாபியா கும்பலின் அட்டகாசத்தை முழுமையாக ஒழிக்க வலியுறுத்தப்பட்டது. ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும் இந்த பிரச்சினையில் இந்திய மருத்துவ கவுன்சில் நேரடியாக தலையிட்டு மருத்துவக்கல்லூரி மாபியாக்கள் இதுவரை கூறி வந்த பொய்களை வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்த பிரச்சினைக்காக சென்னையை சேர்ந்த மேனன் என்பவர் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தார். புதுவை கவர்னரினர் செயலாளர் தேவநீதிதாஸ் மாணவர்களின் சார்பாக தன்னையும் இந்த வழக்கில் ஒரு வாதியாக சேர்த்துக்கொண்டார். புதுவை அரசு இந்த பிரச்சினையில் தனது சார்பாக ஒரு அபிடவிட் தாக்கல் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. இதனை எல்லாம் கவனித்த சென்னை ஐகோர்ட்டு, முக்கிய அமர்வு கட்டணம் குறித்து ஆராய ஒரு கமிட்டி அமைக்குமாறு இடைக்கால தீர்ப்பில் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தில் நாம் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலை வைத்து குறைந்த செலவில் வழக்காடியது. இதே வேளையில் மருத்துவ கல்லூரிகள் அதிக பணம் கொடுத்து பெரிய பெரிய வக்கீல்களை வைத்து ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து தோற்றுப் போயினர். இதன் மூலம் நீதிவென்றது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பின் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக புதுவையில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய மருத்துவ மாபியா கும்பலை சவப்பெட்டியில் வைத்து கடைசி ஆணி அடிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் சங்கங்கள் அளித்த புகார்கள் மூலம் தொடுக்கப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

இதில் 6-க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு அதிகாரி தனது பதவி உயர்வை இழந்துள்ளார். மருத்துவ மாபியா கும்பலின் மூலம் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு காலங்காலமாக மறுக்கப்பட்டு வந்த நீதி இந்த தீர்ப்பின் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதுவையில் உள்ள கல்லூரிகளில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலத்தில் விண்ணப்பித்தாலும் அவர்களுக்கு உரிய நியாயம் வழங்கப்பட்டுள்ளது.

புதுவைக்கு தற்போது புதிதாக வந்துள்ள அதிகாரிகள் மூலம் மாறுதல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தங்கள் பணியை முழுமையாக செய்ய வேண்டும். தற்போது நிலவும் ஆரோக்கியமற்ற சூழ்நிலையை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story