சேலம் போடிநாயக்கன்பட்டியில் ரூ.2.83 கோடியில் ரெயில்வே கீழ்மட்ட பாலப்பணிகள்


சேலம் போடிநாயக்கன்பட்டியில் ரூ.2.83 கோடியில் ரெயில்வே கீழ்மட்ட பாலப்பணிகள்
x
தினத்தந்தி 21 April 2018 4:15 AM IST (Updated: 21 April 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

சேலம் போடிநாயக்கன்பட்டியில் ரூ.2 கோடியே 83 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே கீழ்மட்ட பாலப்பணிகளை கோட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சூரமங்கலம், 

சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியில் ரெயில்வே கீழ்மட்ட பாலம் கட்டும் பணிகள் ரூ.2 கோடியே 83 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை புதியதாக பொறுப்பேற்ற ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ், ரெயில்வே கோட்ட முன்னாள் மேலாளர் ஹரிசங்கர் வர்மா ஆகியோர் நேற்று காலை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது பணிக்காலத்தில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக 50 ஆண்டுகாலம் மக்களின் கோரிக்கையாக இருந்த போடிநாயக்கன்பட்டி ரெயில்வே கீழ்மட்ட பாலப்பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வேகமாக நடைபெற்றது. இந்த பணிகள் இன்று (நேற்று) மாலைக்குள் முடிவடைந்து விடும்.

இந்த தரைக்கீழ் பாலம் சேலம் மக்களுக்கு நான் செலுத்து காணிக்கையாகும். சேலம் பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், தமிழக அரசு மற்றும் மாநகராட்சி வழங்கிய ரூ.2 கோடியே 83 லட்சம் நிதியின் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பாலத்தையொட்டி ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட வேண்டிய இணைப்பு சாலையின் பணிகளை மாநில அரசு விரைவில் மேற்கொள்ள வேண்டும். இந்த பாலம் மூலம் போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, அண்ணாநகர், காட்டூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.

சேலம் ரெயில் நிலையத்தின் 2-வது நுழைவு வாயிற் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடைமேம்பாலம் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 5-வது நடைமேடை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர 4,600 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் கார் நிறுத்துமிடம் இந்த மாத இறுதியில் திறக்கப்படும். எனது பணிக்காலத்தில் அனைத்து தரப்பினருடைய ஒத்துழைப்பும் நன்றாக இருந்ததால் பல்வேறு பணிகள் நிறைவேற்ற முடிந்தது. இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அப்போது சேலம் ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சந்திரபால், கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால், கோட்ட முதுநிலை மின்பொறியாளர் பிரபாகரன், கோட்ட பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story