வடமதுரை அருகே பயங்கரம் லாரி டிரைவர் அடித்து கொலை


வடமதுரை அருகே பயங்கரம் லாரி டிரைவர் அடித்து கொலை
x
தினத்தந்தி 20 April 2018 10:30 PM GMT (Updated: 20 April 2018 10:28 PM GMT)

வடமதுரை அருகே லாரி டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அவருடைய உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமதுரை, 

வடமதுரை சிக்காளிபட்டி சாலையில் நரிப்பாறை என்னுமிடத்தில் கல்குவாரி ஒன்று உள்ளது. அதன் பின் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், வடமதுரை ஆண்டிமாநகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகனும் லாரி டிரைவருமான சந்தனக்குமார் (வயது 27) என்பதும், அவருடைய முகம், கால்களில் ரத்தக்காயங்கள் இருந்ததால், அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவருடைய உடல் அருகே பெரிய கல் ஒன்றும், மதுபாட்டில், கஞ்சா பொட்டலம் ஆகியவை சிதறி கிடந்தன.

அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தினர். அதில் சந்தனக்குமாருக்கு திருமணமாகவில்லை. அவருடைய தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். அவர் தனது தாய் பானுமதி, தம்பி சீனிவாசன் (26) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

அவருடைய நண்பர்களான வடமதுரை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மூர்த்தி (40), ஆண்டிமாநகரை சேர்ந்த துளசிராஜ் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பின்னர் சமாதானமாக போய்விடுவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

அதன்பின்பு சந்தனக்குமார் அம்மையநாயக்கனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மாலையில் மூர்த்தியும், துளசிராஜும் சந்தனக்குமாருக்கு போன் செய்து ஊருக்கு வரும்படி கூறியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து இரவு நரிப்பாறை பகுதியில் மது அருந்தியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே சந்தனக்குமாரின் தம்பி சீனிவாசன் வடமதுரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய அண்ணனை மூர்த்தியும், துளசிராஜும் அடித்து கொலை செய்து இருப்பதாக கூறி இருந்தார்.

அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story