தா.பேட்டை அருகே விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல்
தா.பேட்டை அருகே 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த கோரி விவசாய தொழிலாளர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தா.பேட்டை,
முசிறி ஊராட்சி ஒன்றியம் பேரூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு 100 நாள் திட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பணிகள் வழங்கப்படவில்லை. மேலும் இத்திட்டத்தில் ஏற்கனவே செய்த வேலைகளுக்கும் இதுவரை கூலித்தொகை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் 100நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தி கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவேண்டும். தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சரிசெய்யவேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பேரூர் கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் முசிறி - துறையூர் சாலையில் ஜெம்புநாதபுரத்தில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது.
இது குறித்து தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி தாசில்தார் கருணாநிதி, முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.
Related Tags :
Next Story