கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஒட்டுக்குளம் கரையை பலப்படுத்தும் பணி
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒட்டுக்குளம் கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
கம்பம்,
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் வீரபாண்டி வரை முல்லைப்பெரியாறு தண்ணீரை நம்பி 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இரு போகமும், 5 ஆயிரத்து 190 ஏக்கர் பரப்பில் ஒரு போகமும் நெல்சாகுபடி நடந்து வருகிறது. கம்பம் பகுதிகளில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள வீரப்பநாயக்கன்குளம், ஒடப்படிகுளம், ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்களில் முல்லைப்பெரியாறில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள குளம், கண்மாயில் ஆக்கிரமிப்புகளால் மழைக் காலங்களில் போதுமான தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும் ஜூன் மாதம் பருவமழை பெய்யும் முன்னரே குளத்தை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
இதையடுத்து மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் வண்டல் மண் அள்ளிக் கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள கண்மாய், வாய்க்கால் கரைகளை பராமரிப்பு மற்றும் பலப்படுத்தும் பணிகளுக்காக 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள ஒட்டுக்குளத்தில் கரைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகலப்படுத்தும் பணிகளில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கரையை அகலப்படுத்துவது மட்டுமின்றி விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்வதற்கு வசதியாக கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள குளங்கள், கண்மாய்கள் தூர்வாருவது மட்டுமின்றி கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. குறிப்பாக ஒட்டுக்குளத்தில் 20 அடி அகலத்துக்கு கரை அமைக்கப்படுகிறது. இதன்மூலம் விவசாயிகள் சரக்கு வாகனங்களில் எளிதில் இந்த கரை வழியாக செல்ல முடியும். மழைக்காலம் வருவதற்குள் பராமரிப்பு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story