கோம்பைத்தொழு அருகே மழை இல்லாததால் வறண்ட மேகமலை அருவி


கோம்பைத்தொழு அருகே மழை இல்லாததால் வறண்ட மேகமலை அருவி
x
தினத்தந்தி 22 April 2018 4:00 AM IST (Updated: 21 April 2018 11:49 PM IST)
t-max-icont-min-icon

கோம்மைத்தொழு அருகே, போதிய அளவு மழை இல்லாததால் மேகமலை அருவி வறண்டு போய் காட்சியளிக்கிறது.

கடமலைக்குண்டு, 

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் நீர்வரத்து உள்ள நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்த அருவியின் மேற்பகுதியில் தொட்டி அமைத்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் கோம்பைத்தொழு, குமணன்தொழு உள்ளிட்ட 4 ஊராட்சிகளில் உள்ள 30 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருவிக்கு செல்ல தார்சாலை அமைக்கப்பட்டது.

இந்த தார்சாலை அமைக்கப்பட்ட பின்னர் அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே தார்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சில இடங்களில் மோட்டார் சைக்கிள் கூட செல்ல முடியாத அளவுக்கு உள்ளது.

கடந்த 2 மாதங்களாக போதிய அளவு மழை இல்லாததால் அருவி வறண்ட நிலையில் உள்ளது. மேற்பகுதியில் மட்டும் சிறிதளவு நீர்வரத்து உள்ளது. ஆனால் இந்த நீர் கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்காக எடுத்து செல்லப்படுவதால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மேகமலை வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் தொடர்ந்து அருவியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பருவமழை காலம் தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அருவியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். குறிப்பாக அருவிக்கு செல்லும் தார்சாலையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story