டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலைமறியல்
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வந்தவாசி யில் த.மு.மு.க.வினர் சம்பந்தப்பட்ட கடையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி,
வந்தவாசி நகரில் காந்தி சாலையில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கும், போக்கு வரத்திற்கும் இடையூறு ஏற்படுவதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று த.மு.மு.க.வினர் காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அந்த கடையை முற்றுகையிட்டனர். பின்னர் கடை முன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு நகர தலைவர் அக்பர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முகம்மதுரபி, பொருளாளர் யூசப், நகர துணை செயலாளர் சாதிக், ஆட்டோ சங்க நிர்வாகிகள் மொய்தீன், கறீம் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்து வந்த வந்தவாசி சரக நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மதியழகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் (பொறுப்பு) மற்றும் போலீசார், துணை தாசில்தார் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரசம் செய்தனர். இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். சாலைமறியல் காரணமாக சுமார் 45 நிமிடம் காந்தி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story