பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு


பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 22 April 2018 4:00 AM IST (Updated: 22 April 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

செங்குன்றம்,

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.257 டி.எம்.சி. ஆகும். நேற்று காலை நிலவரப்படி இந்த 4 ஏரிகளில் 3,827 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த 4 ஏரிகளில் பிரதானமான பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாய் மூலமாக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

இதில் புழல் ஏரியின் உயரம் 21.20 அடியாகும். 3 ஆயிரத்து 380 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. 3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் ஜனவரி மாதம் 2-ந்தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. கண்டலேறு அணையில் இருந்து அதிகபட்சமாக 2 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு அதிகபட்சமாக 610 கனஅடி தண்ணீர் வந்தது. கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி முதல் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாய் மூலம் வினாடிக்கு 560 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். அந்த அணையில் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 560 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் 3 நாட்களுக்கு முன் 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் சிறுகடல்பகுதி வரை பாய்ந்து செல்லும்.

அங்குள்ள மதகு வழியாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீீர் திருப்பி விடுவது வழக்கம். புழல் ஏரிக்கு செல்லும் நீர் அங்கு சேமித்து வைத்து வடசென்னை பகுதியில் குடிநீராக வினியோகிப்பது வழக்கம். அதே போல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்பபடும் தண்ணீர் அங்கு சேமித்து வைத்து தென் சென்னை மற்றும் மத்திய சென்னையில் குழாய்களில் குடிநீராக வினியோகிப்பது உண்டு. இந்த நிலையில் புழல் ஏரியில் தற்போது 1,881 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது சுமார் 6 மாதத்துக்கு வடசென்னையில் குடிநீராக வினியோகிக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு நேற்று முதல் பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 1,022 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஏரியின் நீர் மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 25.05 அடியாக பதிவானது. 852 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இங்கிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 19 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

Next Story