தனுஷ்கோடியில் கடல் நீர்மட்டம் உயர்ந்தது


தனுஷ்கோடியில் கடல் நீர்மட்டம் உயர்ந்தது
x
தினத்தந்தி 22 April 2018 4:00 AM IST (Updated: 22 April 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடியில் கடல் நீர்மட்டம் உயர்ந்து புயலால் அழிந்த கட்டிடங்கள் உள்ள பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது.

ராமேசுவரம்,

தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றத்தால், கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் 22,23 ஆகிய 2 நாட்கள் கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல் சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனவே, மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் நடராஜன் உத்தரவின்பேரில் ராமேசுவரம், பாம்பன்,மண்டபம், தனுஷ்கோடி, தொண்டி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தண்டோரா, ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள், மீனவர்களுக்கு நேற்று காலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் நேற்று பக்தர்கள், சுற்றுலா பயணிகள் புனித நீராட தடைவிதிக்கப்பட்டது. இதை மீறி கடலில் குளித்தவர்களை போலீசார் மைக் மூலம் எச்சரிக்கை செய்து வெளியேற்றினர். ஆங்காங்கே எச்சரிக்கை தொடர்பான பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், வேலம்மாள் ஆகியோர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர்.

தனுஷ்கோடியில் வழக்கமாக கடல் சீற்றத்துடன் காணப்படும். நேற்று காலை 11 மணி வரை கடலில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் மதியம் 12 மணிக்கு மேல் தென்கடல் பகுதியில் அலைகள் சீறி எழுந்தன. கடல் நீர்மட்டம் உயர்ந்து புயலால் அழிந்த கட்டிடங்கள் உள்ள பகுதிவரை கடல் நீர் உள்ளே புகுந்து தேங்கி நின்றது.

துணை கலெக்டர் சுஜி பிரமிளா, போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், துணை தாசில்தார் அப்துல் ஜப்பார் ஆகியோர் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்று நிலவரங்களை ஆய்வு செய்தனர். தனுஷ்கோடிக்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சாலையில் வாகனங்கள் செல்லாதவாறு போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாம்பன் பகுதியில் கடல் அமைதியாக காணப்பட்டது. ரெயில் பாலத்தில் வழக்கம்போல ரெயில்கள் சென்றுவந்தன. இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கும், பொதுமக்கள் கடலோர பகுதிக்கும் செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. 

Next Story