தேவிபட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: மாணவர் உள்பட 2 பேர் பலி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


தேவிபட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: மாணவர் உள்பட 2 பேர் பலி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 April 2018 3:45 AM IST (Updated: 22 April 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

தேவிபட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலியானார்கள். ஆம்புலன்சு வசதி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு பொதுமக்கள் பூட்டுப்போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.காவனூர் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் சுரேஷ்(வயது 17). இவர் உப்பூரில் உள்ள தனது உறவினர் முருகானந்தம் என்பவரது வீட்டுக்கு சென்றுவிட்டு பள்ளி விடுமுறையில் இருந்த மாணவர் ஆனந்த் (8) என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாராம்.

இவர்கள் தேவிபட்டினத்தை கடந்து சாலை பணி நடைபெறும் சிறிய பாலத்தின் அருகே வந்தபோது அந்த வழியாக அதிக வேகத்தில் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் காயமடைந்தவர்களை பரிசோதித்து விட்டு மேல்சிகிச்சைக்காக உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கூறினாராம்.

இதையடுத்து அவர்களை ராமநாதபுரம் கொண்டு செல்வதற்காக முயன்றபோது ஆம்புலன்சு வசதி இல்லாததால் சிறுவனை ஒரு ஆட்டோவில் ஏற்றி ராமநாதபுரத்துக்கு கொண்டு வந்தனர். ஆனால் சிறுவன் வழியிலேயே இறந்துபோனான்.

இதேபோல ஆம்புலன்சுக்காக காத்திருந்த படுகாயம் அடைந்தவரும் இறந்து போனார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள், இளைஞர்கள் மருத்துவமனை கேட்டிற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 24 மணி நேரமும் செயல்படும் என்று பெயரளவுக்கு உள்ள இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் போதிய அளவில் இல்லை. 2 ஆம்புலன்சுகள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும் அதனை இயக்குவதற்கு ஓட்டுனர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது என்று கூறி இறந்தவரின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜநளாயினி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.

இதனிடையே ராமநாதபுரத்தில் இருந்து தனியார் ஆம்புலன்சை வரவழைத்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்ல போலீசார் முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த ஆம்புலன்சை ஆஸ்பத்திரிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு போடப்பட்டிருந்த பூட்டை திறந்து இறந்தவரின் உடல் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இதுகுறித்து தேவிபட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Tags :
Next Story