திருபுவனை அருகே நள்ளிரவில் பரபரப்பு: வாலிபர்கள் பஸ்சை கடத்தி தாறுமாறாக ஓட்டினர்


திருபுவனை அருகே நள்ளிரவில் பரபரப்பு: வாலிபர்கள் பஸ்சை கடத்தி தாறுமாறாக ஓட்டினர்
x
தினத்தந்தி 22 April 2018 4:30 AM IST (Updated: 22 April 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

திருபுவனை அருகே நள்ளிரவில் குடிபோதையில் 3 வாலிபர்கள் பஸ்சை கடத்தி தாறுமாறாக ஓட்டினார்கள். இதில் பஸ் மோதி 3 கார்கள், வேன், மோட்டார் சைக்கிள் ஆகியவை சேதமடைந்தன.

திருபுவனை,

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பஸ், கார்கள், வேன்கள் வைத்து வாடகைக்கு விடும் டூரிஸ்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான சுற்றுலா பஸ்சை கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த டிரைவர் சங்கர் (வயது 33) ஓட்டி வந்தார். இந்தநிலையில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு பஸ்சை கலிதீர்த்தாள்குப்பத்துக்கு ஓட்டி வந்தார். இந்த பஸ்சை தனது வீட்டின் அருகே உள்ள மாரியம்மன் கோவில் திடலில் நிறுத்திவிட்டு தூங்கச்சென்று விட்டார்.

இந்தநிலையில் நள்ளிரவில் யாரோ சிலர் அந்த பஸ்சை கடத்திச் செல்ல முயன்றனர். அப்போது தாறுமாறாக ஓட்டியதில் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள், மினிவேன் ஆகியவற்றை பஸ் மோதி தள்ளியது. மின்கம்பம் ஒன்றும் சாய்ந்து விழுந்தது. இதனால் அங்கு மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீதும் பஸ் மோதியது.

இதில் சுமார் 100 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. அதன்பின் அந்த பஸ் அங்குள்ள ஒரு வீட்டின் மீது மோதியதுடன் தாறுமாறாக ஓடி திருபுவனை - திருக்கனூர் ரோட்டில் உள்ள சிறுபாலத்தின் தடுப்பு சுவரில் மோதி நின்றது. நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அதையடுத்து பஸ்சை கடத்த முயன்றவர்கள் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சத்தம் கேட்டும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் அந்த பகுதியில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது கார்கள், வேன் ஆகியவை சேதமடைந்து கிடந்ததையும் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் மின்துறை ஊழியர்கள் விரைந்து வந்து சாய்ந்து விழுந்த மின்கம்பத்தை சரி செய்து மின்வினியோகத்தை சீரமைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரியா, பிரதாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் 3 பேர் சேர்ந்து பஸ்சை கடத்திச் சென்று தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்தது. அவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்ததில், கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், திருவண்டார்கோவில் பெரியபேட் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் அஜித்குமார் (21) மற்றும் சீராளன் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் குடிபோதையில் பஸ்சை கள்ளச்சாவி போட்டு திறந்து கடத்திச்செல்ல முயன்றதும், 17 வயது சிறுவன் பஸ்சை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தி இருப்பதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அஜித்குமார், சீராளன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story