சின்னாறு சோதனைச்சாவடியில் தமிழக-கேரள போலீசார் தீவிர வாகன சோதனை


சின்னாறு சோதனைச்சாவடியில் தமிழக-கேரள போலீசார் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 22 April 2018 3:15 AM IST (Updated: 22 April 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

தளி அருகே உள்ள சின்னாறு சோதனைச்சாவடியில் தமிழக மற்றும் கேரள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட இந்த வனச்சரகங்கள் வழியாக உடுமலையில் இருந்து மூணாறுக்கு செல்வதற்காக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் உடுமலையில் இருந்து மூணாறுக்கு சென்று வருகின்றன.

அந்த வாகனங்கள் மூலமாக வனப்பகுதிக்குள் வாகன ஓட்டிகள் மதுபாட்டில்கள், போதை பொருட்கள் மற்றும் வன உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தடுப்பதற்காக உடுமலை-மூணாறு சாலையில் ஒன்பதாறு மற்றும் சின்னாறு ஆகிய இரு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு உடுமலை வனத்துறையினர் ஒன்பதாறு சோதனை சாவடியிலும் அமராவதி வனத்துறையினர் சின்னாறு சோதனை சாவடியிலும் வாகன தணிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயினும் ஒரு சில வாகன ஓட்டிகள் வனத்துறையினரை ஏமாற்றி விட்டு வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது, மது அருந்துவது வனவிலங்குகளை துன்புறுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வன ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தமிழக மற்றும் கேரள போலீசார் இணைந்து சின்னாறு சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உடுமலை - மூணாறு சாலையில் வந்த வாகனங்களை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அதன் தொடர்ச்சியாக எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், போதை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகளை வாகனங்களில் கொண்டு செல்வதை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினார்கள்.

மேலும் வனப்பகுதிக்குள் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கும்படியும், வனவிலங்குகளுக்கு தொந்தரவுகள் ஏற்படாத வண்ணம் வாகனங்களை இயக்கும்படியும், வாகன ஓட்டிகளுக்கு போலீசார் தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் தொடங்கிய வாகன தணிக்கை மதியம் வரையும் நடைபெற்றது. இதில் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் அமராவதி தளி உடுமலை போலீஸ் நிலையங்களைச்சேர்ந்த போலீசாரும் கேரள மாநிலத்தை சேர்ந்த போலீசாரும் கூட்டாக ஈடுபட்டனர். 

Next Story