காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மே மாதம் 2-ந் தேதி முற்றுகையிட்டு போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மே மாதம் 2-ந் தேதி முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 22 April 2018 4:30 AM IST (Updated: 22 April 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மே மாதம் 2-ந் தேதி தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், தமிழ் தேசிய பாதுகாப்பு கழக நிர்வாகி குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தமிழ் தேசிய பேரியக்க பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் சின்னதுரை, தங்கராசு, தனபாலன், டாக்டர் பாரதிசெல்வன், கிருஷ்ணகுமார், பழனிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு பின்னர் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஆணையத்தின் தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளது. பல்வேறு அநீதிகளை இழைத்துள்ளது.

எனவே காவிரி வழக்கை 5 முதல் 7 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு ஆயம் விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட வேண்டும். அதற்கான முயற்சியை தமிழக அரசு எடுக்க வேண்டும். காவிரி டெல்டாவை மலடாக்கும் மற்றும் கனிம வளத்தை வேட்டையாடும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி கல்லணையில் உறுதியேற்பு ஒன்று கூடல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி அனைத்து மாவட்ட விவசாயிகள், தமிழ் உணர்வாளர்கள் உள்பட அனைவரும் ஒன்று கூடி உணர்வை வெளிப்படுத்த உள்ளோம்.

அடுத்த மாதம்(மே) 2-ந் தேதி தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கேட்க உள்ளோம். அடுத்த மாதம் 3-ந் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நல்ல தீர்வு ஏற்படாவிட்டால் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். காவிரி நீருக்கான போராட்டம் வலுவிழக்கவில்லை. வலுவடைந்து இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் தமிழகத்திற்குரிய காவிரி நீர் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறும்போது, போராட்டத்தில் எங்களை கைது செய்தால் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி யார் வலுவான போராட்டம் நடத்தினாலும் ஆதரிப்போம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, மத்திய அரசுக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்தினால் இதுவரை அவர்கள் செய்த தவறுகளை மன்னித்து விடுவார்கள். எங்களது போராட்டத்திற்கு அனைத்து கட்சியினரிடமும் ஆதரவு கேட்க உள்ளோம் என்றார்.

தனியரசு எம்.எல்.ஏ. கூறும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் குடும்பத்தினருடன் அனைவரும் பங்கேற்க வேண்டும். ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக அனைத்து நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Next Story