சேலத்தில் 2 கார் கண்ணாடிகளை உடைத்து நகை, மடிக்கணினி திருட்டு
சேலத்தில் 2 கார் கண்ணாடிகளை உடைத்து நகை, மடிக்கணினி ஆகியவற்றை திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 32). இவர், நேற்று முன்தினம் குடும்பத்துடன் காரில் சேலத்திற்கு வந்தார். சேலம் புதிய பஸ்நிலையம் பகுதியில் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு பையில் வைத்திருந்த 4 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதனால அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஈரோட்டை சேர்ந்த கார்த்திக் (36) என்பவர் நேற்று முன்தினம் இரவு சேலம் 5 ரோடு பகுதியில் தனது காரை நிறுத்தியிருந்தார். பின்னர், நண்பர் ஒருவரை பார்த்து விட்டு திரும்பி வந்தபோது, அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த மடிக்கணினி, செல்போன் ஆகியவை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இது குறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ஒரேநாளில் 2 கார் கண்ணாடிகளை உடைத்து நகை, மடிக்கணினி, செல்போன் ஆகியவை திருடப்பட்டதால் புதிய பஸ்நிலையம், 5 ரோடு பகுதியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் பொருட்கள் வைக்கும் இடத்தில் போலீசார் சோதனை நடத்தியபோது, அங்கு கார்த்திக் காரில் இருந்து திருடப்பட்ட மடிக்கணினியுடன் ஒரு பை இருந்தது தெரியவந்தது. இதை திருடியவர்கள் யார்? 2 கார்களிலும் திருடியது ஒரே கும்பலை சேர்ந்தவர்களா? என்பது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 கார் கண்ணாடிகளை உடைத்து நகை, மடிக்கணினி, செல்போன் திருடப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story