நானாரில் அமைய உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்


நானாரில் அமைய உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 22 April 2018 5:09 AM IST (Updated: 22 April 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

நானார் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட காங்கிரஸ் குழு, அங்கு அமைய உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

ரத்னகிரி,

ரத்னகிரி மாவட்டம் நானாரில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மராட்டிய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி நானார் பகுதி மக்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பா.ஜனதா கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியும் இந்த திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியினர் இந்த திட்டம் குறித்து நானார் பகுதி மக்களின் நிலைப்பாட்டை அறிய குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு கடந்த 19 மற்றும் 20-ந் தேதிகளில் நானாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தது.

இதைத்தொடர்ந்து நிருபர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் குழு ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் மாநில செயலாளருமான ராஜன் போஸ்லே கூறியதாவது:-

நானார் பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். இந்த திட்டத்தால் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள 30 ஆயிரம் வீடுகள், 65 கோவில்கள் மற்றும் 8 மசூதிகள் அழிவுபாதைக்கு செல்லும். இதுதவிர வனப்பகுதியில் உள்ள 8 கோடி மரங்கள் முற்றிலும் காணாமல் போகும் நிலை ஏற்படும்.

நானார் பகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சம் விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்துக்கு யார் பொறுப்பு?. பொதுமக்கள் இந்த திட்டத்தினை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதனால் அரசு உடனடியாக நானார் பெட்ரோலிய சுத்திகரிப்பு வளாகம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

இந்த பிரச்சினையில் சிவசேனா கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டம் கொண்டு வந்தது. இதன்படி 75 சதவீத நில உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அரசாங்கம் வளர்ச்சித் திட்டங்களுக்காக அவர்களது நிலங்களை கையகப்படுத்த முடியும்.

ஆனால் தற்போதைய அரசு தந்திரமாக இந்த சட்டத்தை கணக்கில் கொள்ளாமல் பழைய மராட்டிய தொழில் வளர்ச்சி கழக (எம்.ஐ.டி.சி.) சட்டத்தின் கீழ் அரசாணை வெளியிட்டு நிலங்களை கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. இந்த அரசாணையை மட்டும் திரும்ப பெற்றாலே நானார் திட்டத்தை எளிதாக தடுத்து விடலாம்.

ஆனால் ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனா இதற்கான நடவடிக்கையில் ஈடுபடாமல் அமைதியாக உள்ளது. மராட்டிய தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய்(சிவசேனாவை சேர்ந்தவர்) அரசாணைக்கு எதிராக எதுவும் செய்யாமல் இருக்கிறார். அதேநேரத்தில் மக்கள் முன்னிலையில் மட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுபோல் சிவசேனா ஏமாற்றி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story