சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 130 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 130 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இந்த சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 165 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உடனடி ஆய்வு செய்து தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், உபகரணங்களும் உடனடியாக வழங்கப்பட்டது.
பராமரிப்பு உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்த 12 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1,500 வீதம் ஆண்டிற்கு ரூ.18,000 என ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் மாதாந்திர உதவி தொகைக்கான உத்தரவு ஆணைகளையும், மூன்று சக்கர சைக்கிள் வேண்டி விண்ணப்பித்த 16 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களையும் மாவட்ட கலெக்டர் ரோகிணி வழங்கினார். மேலும், 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 450 மதிப்பிலான சக்கர நாற்காலிகள், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் கருவிகள், 60 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் உள்பட மொத்தம் 130 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 190 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் உபகரணங்களை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.சக்திவேல் மனோன்மணி, சித்ரா, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story