உஷாரய்யா உஷாரு


உஷாரய்யா உஷாரு
x
தினத்தந்தி 22 April 2018 12:30 PM IST (Updated: 22 April 2018 12:30 PM IST)
t-max-icont-min-icon

அவள் சிறுவயதிலே பெற்றோரை இழந்தவள். தாத்தா, பாட்டி யிடம் வளர்ந்து வந்தாள். நர்சிங் படித்தாள். வளைகுடா நாடு ஒன்றில் வேலை கிடைத்தது.

வள் சிறுவயதிலே பெற்றோரை இழந்தவள். தாத்தா, பாட்டி யிடம் வளர்ந்து வந்தாள். நர்சிங் படித்தாள். வளைகுடா நாடு ஒன்றில் வேலை கிடைத்தது. நல்ல சம்பளம். எதிர்காலத்தை பற்றிய ஏகப்பட்ட கனவுகளோடு அவள் வேலைபார்த்துக்கொண்டிருந்த நிலையில் பாட்டியிடம் இருந்து போன் வந்தது. ‘உன் தாத்தா படுத்த படுக்கையாகிவிட்டார். மணிக்கணக்கில் தொடர்ந்து இருமுகிறார். இருமலில் ரத்தமும் வருகிறது. இனி அவர் பிழைப்பது கஷ்டம். என்னால் அவரை பராமரிக்க முடியவில்லை. நீ உடனே இங்கே கிளம்பி வா. வீட்டிற்கு அருகில் ஏதாவது ஒரு மருத்துவமனையில் வேலைபார்த்துக்கொண்டு, உன் தாத்தாவையும் கவனித்துக்கொள்..’ என்று போனிலே பாட்டி அழுதார்.

தாத்தா எந்நேரமும் பீடியும், புகையுமாக இருந்தவர். ஆஸ்துமா தொந்தரவும் இருந்தது. வயதும் 70-ஐ கடந்துவிட்டது என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், அவளை நான்கு வயதில் இருந்து 24 வயது வரை வளர்த்தவர் அவர்தான். பாட்டியின் கோரிக்கையை கண்டுங்காணாமலும் விட்டுவிட அவளது மனசாட்சி இடந்தரவில்லை. வெளிநாட்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஊர் வந்து சேர்ந்தாள். ஊரும், உறவும் அவளை பெருமையாக பேசியது.

தாத்தா எலும்பும், தோலுமாக உருகிப்போய்க்கிடந்தார். தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தாள். டாக்டர்கள் பல்வேறு பரிசோதனைகளை செய்துவிட்டு, ‘ஆஸ்துமாவின் பாதிப்பு அளவுக்கு அதிகமாகிவிட்டது. அதோடு நுரையீரல் பகுதியில் புற்றுநோயும் பரவி யிருக்கிறது. பிழைக்க வாய்ப்பில்லை. சிகிச்சையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவரது உடலும் இல்லை. அதனால் வீட்டிற்கே கொண்டு சென்றுவிடுங்கள்’ என்றார்கள்.

வீட்டிற்கு அவரை தூக்கிவந்ததும், உறவினர்கள் பலர் சுற்றியிருந்து கொண்டு ‘உங்கள் இறுதி ஆசை என்ன?’ என்று கேட்டார்கள். அவர் சற்றுகூட யோசிக்காமல், ‘நான் வளர்த்த பேத்தியின் கல்யாணத்தை என் கண்குளிர பார்க்கவேண்டும். பார்த்தால்தான் என் ஆத்மா சாந்தியடையும்’ என்றார்.

அந்த வேகத்திலே அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார்கள். அவளிடம் கருத்தே கேட்கவில்லை. பேச்சுக்கு பேச்சு தாத்தா ஆசைப்பட்டுட்டார்.. எப்படியாவது சீக்கிரம் திருமணத்தை நடத்தியே ஆகவேண்டும் என்று, வேகம் காட்டினார்கள். இரண்டே வாரத்தில் ஒருவரை பார்த்து, முடிவும் செய்துவிட்டார்கள். தாத்தாவால் அந்த நர்ஸ் பெண்ணுக்கு அவசர கல்யாணமும் நடந்துவிட்டது.

மாப்பிள்ளை பக்கத்து ஊரில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். புதிதாக திருமணமான எந்த மகிழ்ச்சியும் அவரிடம் இல்லை. தாத்தாவின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதால், தான் மிகுந்த மனக் கவலையோடு இருப்பதாக காரணம்கூறி, படுக்கைஅறையில் அவளுடன் இணைவதை தள்ளிப்போட்டார்.

தாத்தா உயிர்ப்போராட்டத்தோடு இழுத்துக்கொண்டே கிடக்க, அதற்குள் திருமணமாகி ஒரு மாதமாகிவிட்டது. அதுவரை அவளுக்கு முதலிரவு நடக்கவில்லை. அன்றிரவு அவள் வெட்கத்தைவிட்டு கணவரிடம் கேட்டுவிட அவரோ, ‘நான் பெண்ணோடு குடும்பம் நடத்த லாயக்கு இல்லாத ஆள். ஏற்கனவே எனக்கு முன்பு ஒரு திருமணம் நடந்தது. அந்த பெண் என்னைவிட்டு போய்விட்டாள். நான் என்னை பற்றி உன் உறவினர்களிடம் கூறுவதற்குள், அவர்கள் அவசரப்பட்டு கல்யாணம் வரை கொண்டுபோய்விட்டார்கள். நீ என்னை மன்னித்துவிடு’ என்றார்.

அவள் இரவோடு இரவாக தாத்தாவிடம் போய் அனைத்தையும் சொல்லி கதறி அழுதாள். அவர் தனக்கு ஆறுதல் சொல்வார் என்று அவள் காத்திருந்து ஏமாந்தாள். அவரிடமிருந்து பதிலே இல்லை. அதிர்ச்சியில் அவர் இறந்து போய்விட்டார்.

வந்த உறவினர்களும் இறுதிக்காரியம் முடிந்ததும், அவளை திரும்பிக்கூட பார்க்காமல் அவரவர் வேலை முடிந்ததென்று திரும்பிப்போய்விட்டார்கள். தனக்கு நேர்ந்த கொடுமைக்கு பரிகாரம் தேட யாரிடம் போய் முறையிடுவது என்று தெரியாமல் அவள் முடங்கிக்கிடக்கிறாள்!

அவசர கல்யாணம் இப்படித்தான் ஏராளமான அபலைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது..!

- உஷாரு வரும்.

Next Story