பெண்களுக்கான வேலைவாய்ப்பு - காடை வளர்ப்பு முறை-2


பெண்களுக்கான வேலைவாய்ப்பு - காடை வளர்ப்பு முறை-2
x
தினத்தந்தி 22 April 2018 7:05 AM GMT (Updated: 22 April 2018 7:05 AM GMT)

விற்பனைக்கு தயாராக காடை இறைச்சி காடைகளை குஞ்சுப் பருவத்தில் மிகுந்த கவனத்துடன் பராமரிக்க வேண்டும். ஏன்என்றால் அவைகளின் இறகுகள் முழுவளர்ச்சியடையும் வரை, உடல் வெப்பநிலையை சீராக்கிக்கொள்ள அவைகளால் இயலாது.

விற்பனைக்கு தயாராக காடை இறைச்சி காடைகளை குஞ்சுப் பருவத்தில் மிகுந்த கவனத்துடன் பராமரிக்க வேண்டும். ஏன்என்றால் அவைகளின் இறகுகள் முழுவளர்ச்சியடையும் வரை, உடல் வெப்பநிலையை சீராக்கிக்கொள்ள அவைகளால் இயலாது. அதனால் செயற்கை வெப்பம் அளிக்கவேண்டும். இதற்காக புரூடர்கள் பயன்படுகின்றன. 3 அடி விட்டமுடைய வட்ட வடிவ புரூடர் அமைப்பிற்குள் 125 காடை குஞ்சுகளை விட்டு வளர்க்கலாம். 100 குஞ்சுகளை உள்ளே விடுவதாக இருந்தால், 20 வாட் சக்தியுள்ள கூம்பு வடிவ விளக்கினையோ அல்லது வெள்ளை வர்ணம் அடிக்கப்பட்ட பல்புகளையோ, தரையில் இருந்து 10 முதல் 12 அங்குல உயரத்தில் தொங்க விட வேண்டும். முதலிலே பல்புகளை எரியவிட்டு அறையில் போதிய வெப்பம் நிலவிய பின்பு குஞ்சுகளை உள்ளே அனுமதிக்கவேண்டும்.

முதல் நாள் குஞ்சுக்கு 37 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் தேவை. இந்த வெப்பத்தை படிப்படியாக குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப குறைக்கவேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை 3 டிகிரி சென்டிகிரேட் என்ற விகிதத்தில் குறைப்பது அவசியம். புரூடரில் அளவுக்கு அதிகமான குஞ்சுகளை பராமரிக்கக்கூடாது. அளவுக்கு அதிகமாக இருந்தால் மின்சார தடை ஏற்படும்போது குஞ்சுகள் மூச்சுத் திணறி இறந்துவிடும். குளிர், காற்றாலும் பாதிக்கப்படும். அதனால் சரியான அளவில்தான் ஒவ்வொரு புரூடரிலும் குஞ்சுகளை பராமரிக்கவேண்டும். மின்சார தடை ஏற்படும்போது, கரி அடுப்பின் மீது இரும்பு சட்டிகளை கவிழ்த்து வைத்தோ, தண்ணீர் பானைகளை வைத்து சூடுசெய்தோ, காடைகளுக்கு தேவையான வெப்பத்தை பரவச்செய்யவேண்டும். அதிக அளவில் காடை வளர்ப்பவர்கள் மின்தடையை சமாளிக்க ஜெனரேட்டர் வாங்கிவைத்துக்கொள்ள வேண்டும்.

காடை குஞ்சுகளுக்கு முதல் 2 வாரங்களுக்கு தட்டில் தீனி வைக்கலாம். இல்லையெனில் மூடியிடப்படாத ஒரு அங்குல உயரமுள்ள நீள வடிவ தீனித்தொட்டிகளை உபயோகிக்கலாம். புரூடர் அமைப்பின் மத்தியில் விளக்கின் அடியில் தீனித்தொட்டிகளை வைக்க கூடாது. தினசரி 2 முறை தீவனம் இட வேண்டும்.

குஞ்சுகளுக்கு அளிக்கப்படும் குடிநீரில் முதல் ஐந்து நாட் களுக்கு ஏதேனும் ஒரு எதிருயிரி அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தையும், பி.காம்ப்ளக்ஸ் மருந்துகளையும் கலந்து அளித்து வரவேண்டும். இதற்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனை தேவை. தீனி மற்றும் குடிநீர் தொட்டிகளை பண்ணையில் அடுத்தடுத்து நான்கு மூலைகளிலும் ஒவ்வொன்றாக சதுர அமைப்பில் வைக்கலாம். உணவும், நீருமின்றி ஒருபோதும் குஞ்சுகளை தவிக்கவிட்டுவிடக்கூடாது.

காடை குஞ்சு முதல் வாரம் 71 கிராம் தீனியை எடுத்துக்கொள்கிறது. இதனால் 42 கிராம் உடல் எடையை பெறும். 2-வது வார இறுதியில் 101 கிராம் எடையையும், 3-வது வாரத்தில் 157 கிராம் அளவையும், 4-வது வாரத்தில் 212 கிராம் எடையையும் எட்டும். 5-வது வாரத்தில் 263 கிராம் ஆகிவிடும்.

குஞ்சுகள் அளவில் சிறியதாக இருப்பதால் அதன் தீனி சிறிய துகள்களாக அரைக்கப்பட வேண்டும். காடைகளுக்கும், கோழித்தீனிக்கான மூலப்பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. தீவனத்தில் புரதமும், கலோரியும் போதுமான அளவு இருக்க வேண்டும். காடைகளுக்கான தீவனம் வெளி இடங்களில் அதிக அளவில் கிடைப்பதில்லை. காடை பண்ணையாளர்கள் வெளிச்சந்தையில் கோழிக்கான ஆரம்பகால தீனியை வாங்கி, ஒவ்வொரு 15 கிலோ தீவனத்துடன் கடலை புண்ணாக்கு, எள் அல்லது சூரியகாந்தி புண்ணாக்கு, சோயாபீன் தூள் போன்ற ஏதேனும் ஒன்றை ஒரு கிலோ அளவில் சேர்த்து, அரைத்து, கலந்து வழங்கவேண்டும். வழங்கினால், இறைச்சிக்காக வளர்க்கப்படும் காடைகளின் எடை நன்றாக அதிகரிக்கும். குஞ்சுப் பருவத்தில் ஆறு வாரம் வரை அவைகளின் இறப்பு விகிதம் 10 முதல் 15 சதவீதம் வரை இருக்கும். இதில் பெரும்பாலானவை முதல் 5 நாட் களுக்குள் இறந்துவிடும் என்பதால் பராமரிப்பில் அதிக கவனம் தேவை.

காடை இறைச்சி

காடைகளை ஐந்து வார பருவத்தில் இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். காடை இறைச்சியில் மார்பு பகுதி எலும்பையும், தொடை எலும்பையும் தவிர பிற பகுதியிலுள்ள எலும்புகளை இறைச்சியோடு கடித்து சுவைத்து உண்ணலாம். அதன் மூலம் மீன் உணவு போல் காடை இறைச்சி மூலமும், சுண்ணாம்பு சத்து உடலுக்கு அதிக அளவில் கிடைக்கும். வளரும் குழந்தைகளுக்கு காடை இறைச்சி மிகவும் ஏற்ற உணவாகும். அதில் புரதம் 22 சதவீதம் உள்ளது. கொழுப்பு 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அதனால் கொழுப்பு உணவை குறைக்க விரும்பும் பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடலாம்.

காடை இறைச்சியை பதப்படுத்தி கலன்களில் அடைத்தும் விற்பனை செய்யலாம். அதில் தந்தூரி வகை துரித உணவுகளை தயாரித்தும், ஊறுகாய் பதனம் செய்தும் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.

முட்டைக்காகவும் காடைகளை வளர்க்கலாம். அவை 6-வது வாரத்தில் இருந்து முட்டையிட தொடங்கும். காடை முட்டைகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. அவித்த காடை முட்டைகளை குழந்தைகள் விரும்பி உண்பதால் அவர்களுக்கு தேவையான புரதம் குறைந்த விலைக்கே கிடைக்கிறது. முட்டையில் வைட்டமின் சி யை தவிர பிற வைட்டமின்கள் அதிகளவில் உள்ளன. முட்டையிடும் காடைகளை ஆழ்கூளம், கூண்டு முறையில் வளர்க்கலாம். முட்டைகள் அளவில் சிறியதாக இருந்தாலும், அதன் மஞ்சள் கரு கோழி முட்டையுடன் ஒப்பிடும் போது அதிக சதவீதத்தில் இருப்பதால் மிகவும் சுவையான உணவாக இருக்கிறது. ஒரு முட்டை 9 முதல் 12 கிராம் எடை கொண்டது.

ஒரு காடை 200 நாட்களில் சுமார் 100 முட்டைகளும், 300 நாட்களில் 160 முட்டைகளும் இடும். ஆண்டு முழுவதும் 210 முட்டைகள் வரையிலும் இடும். முதலில் அதிகமாக இட்டு, பின்பு படிப்படியாக குறையும். பெரும்பாலும் பிற்பகல் 3 மணிக்கு பிறகே அதிகளவில் முட்டையிடுகின்றன. தினமும் 4 முதல் 5 முறை முட்டைகளை சேகரிக்க வேண்டியதிருக்கும். வளர்ந்து முடையிடும் தருவாயில் உள்ள பெட்டை காடைகள் நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 கிராம் தீனி உட்கொள்ளும். காடை முட்டை ஓடு எளிதில் உடைந்துவிடும் தன்மையை பெற்றிருப்பதால், அதை சேகரிக்கும் போது, கவனத்துடன் இருக்க வேண்டும்.

நல்ல கருத்தரிப்பு திறனுக்கு தாய் காடை 10 முதல் 24 வார வயதுள்ளதாக இருக்க வேண்டும். ஒரு ஆண் காடையுடன் 2 அல்லது 3 பெண் காடைகள் வரை சேர்க்கலாம். இவ்வாறு சேர்ந்த 4 நாட் களுக்கு பிறகு குஞ்சு பொரிக்க தேவையான முட்டைகளை சேகரிக்க வேண்டும். ஆண் காடைகளிடம் இருந்து பெண் காடைகளை பிரித்த 12 நாட்களுக்கு பிறகும் அவைகளுக்கு கருத்தரிப்பு திறன் இருக்கும்.

இனப்பெருக்கத்துக்கான முட்டைகளை சேகரிக்கும்போது சுத்தமான அட்டைகளை பயன்படுத்திட வேண்டும். அழுக்கான முட்டைகளை முடிந்த வரை உடனுக்குடன் சுத்தம் செய்திட வேண்டும், அதோடு வெப்பமான நாட்களில் பண்ணையில் அடிக்கடி முட்டையை சேகரிப்பது அவசியமாகும்.

காடைகளை ஆழ்கூள முறையில் 2 வாரங்களுக்கு மேல் வளர்க்கும்போது அவை பறக்க முற்பட்டு கூரையிலும், பக்கவாட்டு சுவர்களிலும் அடிபட்டு கீழே விழுந்து இறந்துவிடும். அதிக எண்ணிக்கையில் காடைகளை ஒரே இடத்தில் நெருக்கமாக வளர்ப்பதாலும், அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மிதிபட்டும், கம்பிவலையில் உள்புறம் நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகள் குத்தி காயம்பட்டும் காடைகள் இறக்கக்கூடும். எனவே சேதமான நிலையில் உள்ள கம்பி வலைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

காடைகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றி பார்ப்போம்!

காடை கழிச்சல் என்பது ஒருவகை நோய். இது நச்சுக்கிருமியால் ஏற்படுகிறது. இது அனைத்து பருவ காடைகளையும் தாக்கும். பாதிப்புக்குள்ளான காடை தீனி எடுக்காமல் சோர்ந்து காணப்படும். குடலில் புண் ஏற்பட்டு கரும்பச்சை நிறத்தில் கழிச்சல் தோன்றும். இந்த நோய் தாக்கிய காடைகளில் 20 முதல் 30 சதவீதம் இறந்துவிடும். முறையாக கிருமி நீக்கம் செய்தபிறகு அறைகளையும், கூண்டுகளையும் பயன்படுத்துவதன் மூலம் நோயிலிருந்து காடைகளைபாதுகாக்கலாம்.

காடைகளுக்கு அதிக விளக்கு ஒளி கொடுத்தால் அவை விரைவாக முட்டையிடத் தொடங்கிவிடும். ஆனால் அதிக நேரம் விளக்கொளியில் வளர்ந்த காடைகள் இளம் பருவத்திலேயே உடல் வளர்ச்சியின்றி எடை குறைந்து காணப்படும்.

ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது அவை பறந்து திரிவதாலும், பார்வையாளர்கள் தொந்தரவு செய்வதாலும், முட்டைகள் காடையின் வயிற்றினுள்ளேயே உடைந்து உள் வயிற்றுப்புண் ஏற்பட்டு நாளடைவில் இறந்துவிடும். எனவே ஆழ்கூள வளர்ப்பில் பார்வையாளர்கள் தொல்லையை தவிர்ப்பதால் இதுபோன்ற இறப்பு விகிதத்தை பெரிதும் குறைக்கலாம்.

(அடுத்த வாரம்: காடைகளுக்கான தீவன மேலாண்மை மற்றும் விற்பனை வாய்ப்புகள்)

தகவல்: பி.முரளி, உதவி பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர்.

Next Story