இருமனம் இணையும் திருக்குறள் திருமணம்


இருமனம் இணையும் திருக்குறள் திருமணம்
x
தினத்தந்தி 22 April 2018 12:40 PM IST (Updated: 22 April 2018 12:40 PM IST)
t-max-icont-min-icon

திருமண நிகழ்ச்சிகள் இப்போது மக்களைக் கவரும் விதத்தில் வித்தியாசமான முறைகளில் நடக்கின்றன.

திருமண நிகழ்ச்சிகள் இப்போது மக்களைக் கவரும் விதத்தில் வித்தியாசமான முறைகளில் நடக்கின்றன. அழைப்பிதழில் இருந்து- மணமக்கள் உடுத்தும் ஆடை, மேடை அலங்காரம், ஊர்வலம், உணவு எல்லாமுமே காலத்துக்கு தக்கபடியான மாற்றங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், திருமண முறையே மாறி புதுமைபடைத்துக்கொண்டிருக்கிறது. மணமக்களின் குடும்பத்தினர் தங்களுக்கு பிடித்ததுபோல் திருமண முறைகளை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியோடு மணவிழாவை நடத்தி இல்லறத்தில் இணைகிறார்கள். அந்த வகையில் மக்களை கருத்துடனும், களிப்புடனும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது, திருக்குறள் வழி திருமணங்கள்.

தேனி அருகே நாகலாபுரத்தில் சமீபத்தில் திருக்குறள் வழி திருமணம் நடந்தது. அதில் மாறுபட்ட வித்தியாசமான காட்சிகள் இடம்பெற்றன. இறைவாழ்த்துப் பாடினார்கள். பின்பு மொழி வாழ்த்துப் பாடினார்கள். அடுத்து திருக்குறளை போற்றி மகிழ்ந்தார்கள். பிறகு மண்வழிபாடு நடத்தினார்கள். இப்படி பலவிதமாக அங்கு அரங்கேறியதெல்லாம் முற்றிலும் மாறுபட்ட நிகழ்வுகள்.

பொதுவாக ‘எப்போது முகூர்த்தம் முடியும். சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்கப்போகலாம்’ என்ற மனநிலையில்தான் மணவிழா கூட்டம் காணப்படும். இங்கே அப்படியில்லாமல், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்று ஆர்வத்தோடு கவனிக்கும் விதத்தில் மணவிழா நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்துகொண்டிருந்தன. மணமக்கள் புன்னகை முகத்தோடு சம்பிரதாயங்களை செய்து கொண்டிருக்க, வாழ்த்த வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும் திருமண விழாவை வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அனைவரது வாழ்த்துக்களோடு கருத்துள்ள அந்த திருமணம் கலகலப்போடு நிறைவடைய சற்று அதிக நேரம் எடுத்துக்கொண்டது.

திருக்குறள் வழியில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள்: கார்த்திக்-மீனாட்சி. வாழ்த்து மழைக்குள் நனைந்துகொண்டிருந்த மீனாட்சிக்கும் இந்த திரு மணம் வித்தியாசமான அனுபவத்தைதான் கொடுத்திருக்கிறது. அவர் சொல்கிறார்:

“தேனி அருகே உள்ள ஜங்கால்பட்டி என்ற கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். எம்.ஏ., எம்.எட். படித்திருக்கிறேன். திருமண கனவு எல்லா பெண்களையும் போல் எனக்கும் இருந்தது. எனது திரு மணம் மற்றவர்களால் புகழ்ந்து பேசப்படக்கூடியதாக இருக்கவேண்டும் என்றும் விரும்பினேன். கார்த்திக் வீட்டில் இருந்து பெண் பார்க்க வந்தபோதே திருக்குறள் வழி முறையில் திரு மணம் செய்துகொள்ளலாம் என்றார்கள். முதலில் எனக்கு லேசான தயக்கம் இருந்தது. அதன்பிறகு இந்த திருமண முறை குறித்து அறிந்ததும் சம்மதித்தேன். எதிர்பார்த்ததைவிட மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் எனக்கு கிடைத்திருக்கிறது. புரியாத சடங்கு சம்பிரதாயங்களாக இல்லாமல் புரிந்து செய்யக் கூடிய வாழ்வியல் விஷயங்கள் இதில் நிறைந்திருந்தன.

எனக்கு தமிழ் மீது ஆழ்ந்த பற்று எப்போதுமே உண்டு. ஆனால் திருக்குறள் மீது நான் பெரிய அளவில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. இந்த திரு மணம் எனக்கு திருக்குறளின் பெருமையை உணர்த்தியது. வாழ்க்கையை சிறப்பாக நடத்த அதை மட்டுமே படித்து, அதன் வழி நடந்தால் போதும் என்பதை உணர்ந்துள்ளேன். திருக்குறள் போன்று எங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்” என்று சுருங்கச் சொன்னார் அவர்.

திருக்குறள் வழியில் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது என்பது பற்றி மணமகன் கார்த்திக் சொல்கிறார்:

“எனது தாத்தா சிவசங்கரன் நாகலாபுரத்தில் திருக்குறள் மன்றத்தை நிறுவியவர். எனது தந்தை குமணன் மத்திய பாதுகாப்பு படையில் வேலை பார்க்கிறார். நான் மும்பையில் பிறந்தேன். முதலில் இந்தி பேசத் தான் கற்றுக் கொண்டேன். நான் தமிழை கற்க வேண்டும் என்பதற்காக என்னை நாகலாபுரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் தந்தை சேர்த்தார். எங்கள் ஊரில் திருக்குறள் மீதான பற்று கொண்டவர்கள் அதிகம். எனது தங்கை பார்கவிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறள் வழி திருமணம்தான் நடந்தது. எனக்கும் அதுபோல் நடக்க வேண்டும் என்று விரும்பினேன். மீனாட்சி குடும்பத்தாரிடமும் சொன்னேன். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். இந்த வித்தியாசமான திருமணம் எங்களுக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்களை பெற்றுத்தந்திருக்கிறது.

திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். இந்த பயிர் எங்களை பொறுத்தவரை தமிழ் பற்றோடு வளர வேண்டும். பகட்டாய் திருமணம் முடிக்காமல், பண்பாட்டை போற்றும் வகையில் திருமணம் முடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். என் மனைவிக்கும் திருமணத்துக்கு பிறகு தமிழ் மீதான பற்று அதிகரித்து உள்ளது. நான் எம்.சி.ஏ. படித்துள்ளேன். தற்போது தேனியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறேன். முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் பெயரை தான் கடைக்கு வைத்துள்ளேன்’ என்றார்.

இந்த திருக்குறள் வழி திருமணத்தை நடத்தி வைத்தவர் இளங் குமரன். இவரும் நாகலாபுரத்தை சேர்ந்தவர் தான். தமிழ்ப் பற்று நிறைந்தவர். தையல் கலைஞர். இவர் திருக்குறள் வழியில் இதுவரை 144 திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். அவருடைய சொந்த ஊரில் மட்டும் 40 திருமணங்கள் இந்த முறையில் நடந்திருக்கின்றன. திருக்குறள் வழி திருமண முறை பற்றி அவர் வித்தியாசமான விளக்கம் தருகிறார்!

“மண விழாவின் தொடக்கத்தில் இறைவாழ்த்து பாடப்படும். பின்பு மொழி வாழ்த்து பாடிவிட்டு, 108 திருக்குறள் போற்றி சொல்லப்படும். திருக்குறள் போற்றி என்பது ‘அகர முதலாம் ஆதியே போற்றி... மலர்மிசை ஏகும் மானடி போற்றி’ என குறளில் உள்ள வரிகளை, வார்த்தைகளை கொண்டு எழுதப்பட்ட போற்றிப்பாடலாகும். அதன்பின்னர், மண் வழிபாடு நடத்துவோம். மண் தோண்டத் தோண்ட வளம் கொடுக்கும். எந்த எதிர்வினையும் ஆற்றாது. மண் இல்லையேல் மனிதர்களுக்கு வாழ்க்கை கிடையாது. அதனால், மணமக்கள் இருவரும் மண்ணுக்கு மலர் தூவி வணங்குவர். அடுத்ததாக திருவள்ளுவர் வழிபாடு நடக்கும். அவர் எந்த மதத்தையும் சாராதவர். எல்லா மனிதர்களுக்கும் ஏற்ற கருத்துகளை சொன்னவர். அவர் வகுத்துக் கொடுத்த வழியில் வாழ்க்கையை தொடங்குவோம் என்பதற்காக வள்ளுவர் படத்துக்கு மணமக்கள் மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துவர்.

பின்னர் சான்றோர் வழிபாடும், பெற்றோர் வழிபாடும் நடக்கும். திருமணத்துக்கு மணமக்களின் இருவீட்டு உறவினர்களும் வந்து இருப்பார்கள். இதற்கு முந்தைய காலங்களில் ஏதேனும் சூழலில் அவர்கள் மணமக்கள் மீது கடுஞ்சொற்களை பிரயோகித்திருக்கக்கூடும். அவற்றை எல்லாம் கடந்து, சான்றோர் எல்லோரும் மணமக்களை மனதார வாழ்த்த வேண்டும் என்பதற்காக சான்றோர் வழிபாடு நடத்தப்படுகிறது. மணமக்கள் எழுந்து நின்று மணமேடை முன்பு அமர்ந்து இருக்கும் உறவினர்களை பார்த்து வணங்குவர். அப்போது அங்கிருக்கும் அனைவரும் மணமக்களை பார்த்து, ‘மணமக்கள் வாழ்க! மணமக்கள் வாழ்க!’ என ஒரே குரலில் வாழ்த்துவார்கள். பெற்றோர் வழிபாட்டின்போது மணமக்களின் பெற்றோருடைய பெருமைகள் எடுத்துக் கூறப்படும். மணமகன் தனது பெற்றோருக்கும், மணமகள் தனது பெற்றோருக்கும் ‘பெற்றோர் வாழ்க! பெருந்தகை வாழ்க!’ என்று சொல்லி மாலை அணிவித்து வணங்குவார்கள்.

பெற்றோர் வழிபாட்டுக்கு பிறகு தாலி கட்டும் நிகழ்வு. விழாவுக்கு வந்திருக்கும் உறவினர்களில் சுமங்கலிப் பெண்கள் 10 பேர் கூடி வந்து, தாலியை எடுத்துக் கொடுப்பார்கள். மேளம் கண்டறியப்படாத கால கட்டங்களில் குலவைச் சத்தம் தான் இசை. அந்த குலவைச் சத்தம் ஒலிக்க மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்டுவார். அரிசியால் அட்சதை தூவும் பழக்கம் இதில் கிடையாது. மண்ணை வழிபடும் நாம் மண்ணில் விளையும் உணவு பொருளை வீணடிக்கக்கூடாது. எனவே மலர் தூவி வாழ்த்துவார்கள். மலரை கடைசி வரிசையில் இருப்பவரும் மணமேடையை நோக்கி வீசமாட்டார்கள். தேடிச் சென்று வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்வதற்காக மணமக்கள் இருவரும் மேடையில் இருந்து இறக்கி உறவினர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு சென்று வாழ்த்தை பெறுவார்கள். ஒவ்வொருவரும் மணமக்களின் மீது மலர் தூவி வாழ்த்துவார்கள்.

அதன்பிறகு மாலை மாற்றும் நிகழ்வு. மணமக்கள் ஒரு வருக்கு ஒருவர் 3 முறை மாலையை மாற்றிக் கொள்வார்கள். பின்னர் இடம் மாற்றி அமர்ந்து கொள்வார்கள். இறுதியாக குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடக்கும். ஒற்றைத் திரியில் எரியும் ஜோதி, அறை முழுவதும் வெளிச்சம் கொடுப்பது போல், இந்த மணமக்கள் தலைமுறை தலைமுறையாக ஒளிவீசி வாழ வேண்டும் என்று கூறி, இருவரும் சேர்ந்து விளக்கு ஏற்றுவார்கள். அத்துடன் திருமண சடங்குகள் நிறைவடையும்” என்றார். இவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக திருக்குறள் வழி திரு மணத்தை நடத்திவைக்கிறார். புத்தகங்களும் எழுதியுள்ளார். புலவர் இளங்குமரனுக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், திருத்தக்கன், மெய்கண்டார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர் தனது வீட்டில் பெரிய நூலகம் ஒன்றையும் அமைத்திருக்கிறார்.

Next Story