காணாமல் போன நிலா
“யாரு..?” என்று வாய் வார்த்தையாகக் கேட்டாலும், அருணுக்கு உடனடியாகப் புரிந்துவிட்டது. பூர்ணிமாவை இழுத்து அணைத்துக்கொண்டான்.
“யாரு..?” என்று வாய் வார்த்தையாகக் கேட்டாலும், அருணுக்கு உடனடியாகப் புரிந்துவிட்டது. பூர்ணிமாவை இழுத்து அணைத்துக்கொண்டான்.
“அடி கள்ளி.. சொல்லவேயில்ல..?” என்று அவள் கன்னத்தில் தட்டினான். “ச்சீ, சினிமா வசனம்லாம் சொல்லாத.. டெஸ்ட் பண்ணிப் பார்த்ததுல எனக்கே இன்னிக்குதான் நிச்சயமாச்சு..”
“ஏய், இந்த சமயத்துல நீ ஓய்வெடுக்கணும், இல்ல..? வேலைக்குப் போயிட்டு, வீட்டு வேலையும் பண்ணிக்கிட்டு.. வேண்டாம், வேலையை விட்டுடுப்பா..”
“இல்ல, அருண்.. நாம இப்பதான் வீடு கட்டியிருக்கோம்.. நிறைய செலவு, நிறைய கடன்.. கண்டிப்பா வேலையை விடமுடியாது. சம்பாதிச்சுதான் ஆகணும்..”
“அப்ப நான் வேலைய விட்டுரவா..?” என்று அருண் கண்ணடிக்க..
அவன் தலையில் செல்லமாகக் குட்டினாள், பூர்ணிமா.
“சொல்ல வந்ததைச் சொல்ல விடு.. நாம ஊருக்குப் போயிருந்தபோது, தாயம்மான்னு ஒருத்தங்களை உனக்கு அறிமுகம் பண்ணேனே, ஞாபகம் இருக்கா..?”
“யாரு, நரைச்ச தலையோட உன் கன்னத்த இப்படி தடவிட்டே இருந்தாங்களே..?” என்று அருண் அவள் கன்னத்தில் சீண்டும் விதமாக விரலை ஓட்டிக்கொண்டே கேட்டான்.
“அவங்கதான்.. என்னைத் தூக்கி வளர்த்தவங்க.. சின்ன வயசுல இருந்தே எங்க வீட்ல இருக்கறவங்க.. நம்ப கல்யாணம் ஆகும்போதே எங்கம்மா சொன்னாங்க, ‘இவங்களையும் சென்னைக்குக் கூட்டிட்டுப் போயிடேன்.. உனக்கு உதவியா இருப்பாங்க’னு. நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்..”
“உங்கம்மா சரியான வில்லியா இருப்பாங்க போல இருக்கு? சிறுசுங்க கல்யாணம் ஆகிப் போகுதுங்களே, அதுங்களுக்கு தனிமை வேணும்னு யோசிக்காம, கூடவே ஆள அனுப்பறேன்னு சொல்லியிருக்காங்க..?”
“நீ இந்த மாதிரி விளையாட்டா பேசிக்கேட்டு எவ்வளவு நாளாச்சு, அருண்..” என்று அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள், பூர்ணிமா. “இறுக்கம்லாம் விலகி இப்பதான் உன் மூஞ்சியே பழைய சிரிப்பைக் காட்டுது..”
“ஒண்ணு செய்வோம்.. இந்த வாரக் கடைசியில ஊருக்குப் போவோம்.. உங்க அம்மாப்பாகிட்ட விஷயத்தைச் சொல்வோம். தாயம்மா நம்மகூட வரதுக்குப் பிரியப்பட்டா, கூட்டிட்டு வருவோம். அவங்க இங்க இருந்தா, எனக்கும் பெரிய பலமா இருக்கும்..” என்றான் அருண்.
* * *
திருப்பத்தூர். திண்ணையும், முற்றமும்கொண்ட பூர்ணிமாவின் வீடு.
பூர்ணிமாவை கிழக்கு பார்த்து உட்காரவைத்து, அவளுடைய அம்மா திருஷ்டி சுற்றிப்போட்டாள்.
“நாங்கள்லாம் வந்து உன்கூட இருக்க முடியலையேன்னு ஏற் கனவே வருத்தமாதான் இருந்தது. தாயம்மாவை நீ தாராளமா கூட்டிட்டுப் போலாம். என்ன தாயம்மா, போறியா..?”
தாயம்மா கண்கள் ஒளிர, “என்னாத்தா இப்டிக் கேட்டுட்ட..? என் இடுப்புல வளர்ந்த புள்ள இது.. இதுக்கு ஒத்தாசை பண்ண போகமாட்டேனா..? ஒண்ணென்ன, மூணு நாலு பெத்துக் குடுக்கட்டும்.. வளர்த்துக் குடுக்க நான் இருக்கேன்..” என்றாள்.
தாயம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்தான், அருண்.
எப்போதும் வெள்ளைப் புடவை, வெள்ளை ரவிக்கை. நரைத்த கூந்தலை ஒரு சிறு கொண்டையாக முடிந்திருந்தாள். நெற்றியில் சின்னதாக ஒரு விபூதிக் கீற்று. கைகளில், காதுகளில், கழுத்தில் எங்கும் ஒரு பொட்டுத் தங்கம்கூட கிடையாது. எவ்வளவோ தடவை சொல்லியும், பிளாஸ்டிக் நகைகள்கூட அணிய மறுத்திருக்கிறாள் தாயம்மா என்று பூர்ணிமா சொல்லியிருக்கிறாள்.
அருணை அவள் ‘சின்ன அய்யா’ என்று சற்று கூச்சத்துடன் விளிப்பதும், அவன் பேசுகையில், அவன் கண்களைக்கூட பார்க்காமல் தலையைக் குனிந்துகொள்வதையும் கண்டு பூர்ணிமா, “இவர் உங்க மகன் மாதிரி.. ஏன் வெக்கப்படறீங்க..?” என்று கேட்டாள்.
“மாப்பிள்ளைன்னா, மரியாதை குடுக்கணும் தாயி..”
“என்னை மாப்பிள்ளையா நினைக்காதீங்க.. மகனாவே நினைச்சாதான் ஊருக்கு வரலாம்..” என்றான் அருண், குறும்பு கொப்பளிக்க.
“சின்ன அய்யா சொன்னா சரி..” என்று அதற்கும் நிமிர்ந்து பார்க்காமல் வெட்கப்புன்னகையுடன் பதில் சொன்னாள், தாயம்மா.
அன்றிரவே தாயம்மா ஒரு பெட்டியில் தன்னுடைய சிறு உடைமைகளை அடைத்து எடுத்துக்கொண்டு, பயணத்துக்குத் தயாரானாள்.
* * *
சென்னை, தாயம்மாவுக்கு சற்று மிரட்சியாக இருந்தது.
பரபரவென்று விரையும் வாகனங்கள். சதா, எரிச்சலாகப் பேசும் மனிதர்கள் என்று எல்லாமே விநோதமாக இருந்தது.
வேளச்சேரி வீடு அவளுக்குப் பிடித்திருந்தது.
“ரொம்ப களையா கட்டியிருக்கீங்க தாயி..! ஆனா, வாசல் ஏன் இப்படி மூளியா இருக்கு..?”
“என்ன தாயம்மா சொல்றீங்க..?”
“அக்கம்பக்கத்துல பாரு பூர்ணி்மா.. கேட்டு வாசல்ல அவங்கவங்க பேரு போட்டு போர்டு தொங்குது.. நீயும், சின்ன அய்யாவும் உங்க பேரை இங்க போட்டுக்கலாம் இல்ல..?”
“பாரேன், பூர்ணிமா.. நமக்குத் தோணவேயில்ல..? ஊர்லேர்ந்து வந்தாலும் பளிச்சுனு சொல்லிட்டாங்க.. நாளைக்கே ரெடி பண்ணிடறேன்..” என்றான் அருண்.
* * *
மறுநாள்.
அந்தப் பெயர்ப்பலகையில், பூர்ணிமா, அருண் என்று இரண்டு பெயர்களும் செதுக்கப்பட்ட ஓர் அலங்காரப் பளிங்குக்கல் மரச் சட்டத்துக்குள் பொருத்தப்பட்டிருந்தது. அதை வாசலில் ஆணியடித்து மாட்டினான், அருண்.
“இப்பதான் வீடே அழகா இருக்கு..!” என்றாள் தாயம்மா.
“இதுல என்ன பேர் எழுதியிருக்குன்னு படிச்சீங்களா..?”
“நான் ஸ்கூலுக்கே போவல.. கையெழுத்து போடவே நம்ம பூர்ணிமாகிட்டதான் கொஞ்சம் கொஞ்சமாக் கத்துக்கிட்டேன், சின்ன அய்யா..!”
“நீங்க என்னை அருண்-னு ஒழுங்கா பேரு சொல்லிக் கூப்புடலைனா, நான் இனிமே உங்ககூட பேசவே மாட்டேன்..”
தாயம்மா கூச்சத்துடன் ‘அருண் தம்பி’ என்று சொல்வதற்குள், முகத்தின் அத்தனை தசைகளும் கோணிக்கொண்டன.
“மேல எழுதியிருக்கிறது உங்க மக பேரு, பூர்ணிமா..! கீழதான் என் பேரே இருக்கு..!” என்றான் அருண், சிரித்தபடி.
தாயம்மாவால் வேலை செய்யாமல் சோம்பலாகப் பொருந்தி அமரவே முடியவில்லை.
“இங்க அம்சமா ஒரு தோட்டம் போடலாமே..!” என்று அவளாக வீட்டைச் சுற்றி இருந்த இடத்தில் மண்ணைக் கொத்தி, தோட்ட வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள். அவள் கேட்டுக்கொண்டதன் பேரில், அருண், தோட்டத்துக்குத் தேவையான உபகரணங்களை வாங்கித் தந்தான்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்த ஒரு பெரிய தோட்டத்துக்கு அவளைக் கூட்டிச் சென்றார்கள். பல செடிகளை அங்கு தாயம்மா பார்த்துப் பார்த்து வாங்கினாள். வளமான செம்மண்ணும், அளவான எரு மண்ணும் கலந்து தாயம்மா தோட்டம் அமைக்க ஆரம்பித்தாள்.
* * *
அடுத்த ஞாயிறு. தாயம்மா தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, கேட்டுக்கு வெளியே மோட்டார்சைக்கிள் வந்து நின்றது. அதிலிருந்து கார்த்திக்கும், முத்ராவும் இறங்குவதை கவனித்தாள்.
“புதுசா வேலைக்காரி வெச்சிருக்காங்க போல இருக்கு..” என்று அவள் கார்த்திக்கிடம் சொல்வது தாயம்மாவுக்குக் கேட்டது. தோட்டத்து வேலையை நிறுத்திவிட்டு, அவசரமாக உள்ளே சென்று, “பூர்ணிமாக்கண்ணு, யாரோ வந்திருக்காங்க..” என்றாள்.
பூர்ணிமா வெளியில் வந்தாள். முகம் மலர்ந்து, அவர்களை வரவேற்றாள். தாயம்மாவை அறிமுகப்படுத்தினாள்.
“இவங்க எனக்கு அம்மா மாதிரி. சின்ன வயசுல இருந்து என்னை எடுத்து வளர்த்தவங்க. எனக்கு உதவியா இருக்கறதுக்கு வந்திருக்காங்க..”
கார்த்திக் அவளைப் பார்த்து கைகளைக் கூப்பினான்.
“பார்த்தா, ரொம்ப வெகுளியா தெரியறாங்க..!” என்றாள் முத்ரா.
“ஆமாம். நகரத்து வஞ்சம் எல்லாம் அவங்களுக்குத் தெரியாது. மனசு பூரா அன்புதான்..!” என்றாள் பூர்ணிமா.
“நான் காப்பித் தண்ணி போட்டு எடுத்திட்டு வரேன் தாயி..” என்று சொல்லிவிட்டு, தாயம்மா சமையலறைக்குள் விரைந்தாள்.
“வாங்க.. வாங்க..” என்று ஈரத் தலையைத் துவட்டியபடியே வந்தான், அருண்.
“அருண், உங்களுக்கு ஒரு நல்ல சேதி..! ஒரு கெட்ட சேதி..! எதை முதல்ல சொல்லட்டும்..?” என்றான், கார்த்திக்.
“நல்ல சேதியை முதல்ல சொல்லுங்க..” என்றாள், பூர்ணிமா.
“எங்க கம்பெனியில இந்த வீட்டை வாடகைக்கு எடுக்க ஒத்துக்கிட்டாங்க..”
“அப்ப, கெட்ட செய்தி..?”
“சொல்லிடட்டுமா..?” என்று கார்த்திக் முத்ராவிடம் கேட்டான்.
“அட சஸ்பென்ஸ் வைக்காம, சொல்லுங்க..” என்று அருண் போலியாகக் கெஞ்சினான்.
-தொடரும்.
Related Tags :
Next Story