வித்தியாசமான கல்வி
பாகிஸ்தானில் திருநங்கைகளின் கல்வி மேம்பாட்டிற்காக முதன் முதலாக தனி பள்ளிக்கூடம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் திருநங்கைகளின் கல்வி மேம்பாட்டிற்காக முதன் முதலாக தனி பள்ளிக்கூடம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் இந்த பள்ளிக்கூடம் இயங்குகிறது. இங்கு முதல்கட்டமாக 30 திருநங்கைகள் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களின் திறமைக்கு தக்கபடி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பேஷன் டிசைனிங், தையல் போன்ற பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இதுகுறித்து தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மொய்ஷா தாரிக் கூறுகையில், ‘‘திருநங்கைகளில் பெரும்பாலானோர் பேஷன் டிசைனிங்கில் அதிக ஆர்வம் காட்டு கிறார்கள். எம்ப்ராய்டரி, தையல் பயிற்சி, கிராபிக்ஸ் டிசைனிங், சமையல் கலை, அழகுக்கலை போன்றவற்றை தெரிந்து கொள்ளவும் விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப படிப்புகளை வடிவமைத்திருக்கிறோம்’’ என்கிறார்.
இந்த பள்ளிக்கூடம் ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்தவர் ஆசிப் ஷாசத். திருநங்கைகளுக்கு தனியாக பள்ளிக்கூடம் ஆரம்பித்திருக்கும் நோக்கம் குறித்து அவர் கூறுகையில், ‘‘2016-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் உள்ள திருநங்கை களின் பள்ளிக்கூடத்தில் குண்டு வெடித்தது. அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட திருநங்கைகளை பார்த்து மனவேதனை அடைந்தேன். அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை கல்வி மூலம் வழங்க விரும்பினேன். அது இங்கு சாத்தியமாகி இருக்கிறது. அவர்களின் வாழ்க்கை மேம்படுவதற்கான முயற்சி இது’’ என்கிறார்.
திருநங்கைகள் சுய தொழில் தொடங்கவோ அல்லது வேறு இடங்களில் வேலை செய்யவோ ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்களை உருவாக்கி இருக்கிறார்கள். தொடக்க கல்வி முதல் 12 ஆண்டுகள் வரை மேல்நிலை கல்வியை கற்பதற்கு ஏற்பவும் பள்ளியில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் சேருவதற்கு திருநங்கைகளுக்கு வயது வரம்பு இல்லை. எந்த வயதிலும் சேர்ந்து படிக்கலாம்.
Related Tags :
Next Story