வயலில் விளையும் ‘மின்சாரம்’


வயலில் விளையும் ‘மின்சாரம்’
x
தினத்தந்தி 22 April 2018 1:31 PM IST (Updated: 22 April 2018 1:31 PM IST)
t-max-icont-min-icon

மனைவியுடன் சோலார் பேனல்களை சுத்தம் செய்யும் சவுதா குஜராத் மாநிலம் ஹெடா மாவட்டத்திலுள்ள துண்டி கிராமம் சோலார் மூலம் மின்சாரத்தை பெற்று பயன்படுத்துவதில் முன்னோடியாக திகழ்கிறது.

னைவியுடன் சோலார் பேனல்களை சுத்தம் செய்யும் சவுதா
குஜராத் மாநிலம் ஹெடா மாவட்டத்திலுள்ள துண்டி கிராமம் சோலார் மூலம் மின்சாரத்தை பெற்று பயன்படுத்துவதில் முன்னோடியாக திகழ்கிறது. அங்குள்ள வயல்வெளிகளில் பயிர் களுக்கு ஈடாக சோலார் பேனல்களும் காணப்படுகின்றன. இதற்கு முன்பு விவசாய பயிர்களை அறுவடை செய்து கொண்டிருந்தவர்கள் இப்போது சோலார் பேனல்களை லாபம் தரும் முதலீடாக அறுவடை செய்ய தொடங்கி இருக்கிறார்கள். சோலார் பேனல்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை அரசு சார்ந்த நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறார்கள். சோலார் பேனல்களில் இயங்கும் பம்புகள் மூலம் பெறப்படும் நீரை அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு வழங்குகிறார்கள். டீசல்களுக்கு ஆகும் செலவை விட சோலாரில் இயங்கும் மோட்டார் பம்புகளுக்கு செலவு குறைவு என்பதால் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

‘‘டீசல் மூலம் மோட்டார்களை சில மணி நேரம் இயக்குவதற்கு நிறைய செலவாகும். நாங்கள் சோலார் பம்புகள் மூலம் 4 மணி நேரத்திற்கு 250 ரூபாய்க்கு பாசன நீரை வழங்குகிறோம். இந்த 4 மணி நேரத்திற்கு 20 யூனிட் மின்சாரமே தேவைப்படும். டீசல் செலவை ஒப்பிடும்போது பாதிக்கும் மேல் செலவு குறைகிறது. அதனால் எங்களுக்கும், விவசாயிகளுக்கும் லாபமாக இருக்கிறது’’ என்று சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பவர்கள் சொல்கிறார்கள்.

சவுதா என்ற விவசாயி தனது விளை நிலத்தில் 36 சோலார் பேனல்களை நிறுவி இருக்கிறார். ஒரு யூனிட்டுக்கு ரூ.7 என்ற அளவில் தினமும் 50 முதல் 60 கிலோ வாட் மின்சாரத்தை விற்பனை செய்து வருகிறார். அங்கு விவசாய பயன்பாட்டுக்கு மட்டுமின்றி வீட்டிற்கும் சோலார் மின்சாரத்தை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

அந்த கிராமத்தை சேர்ந்த தக்ஷா என்ற பெண் விவசாயி, ‘‘முன்பெல்லாம் தண்ணீர் எடுப்பதற்கு சில கிலோமீட்டர் நடந்து சென்று அடிபம்பில் சிரமப்பட்டு தண்ணீர் எடுக்க வேண்டியிருக்கும். இப்போது அந்த சிரமம் இல்லை. சோலார் மின்சாரத்தால் மோட்டாரை பயன்படுத்தி தடையின்றி நிலத்தடி நீரை பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோதுமை, அரிசி விளைவிப்பதற்கு தண்ணீர் பற்றாக்குறையால் சிரமப்பட்டோம். டீசல் பம்புகள் சரியாக வேலை செய்யாது. வெளியிடங்களில் இருந்து வயலுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். இப்போது சோலார் பம்புகளை பயன் படுத்துவதால் பாசன செலவு வெகுவாக குறைந்துவிட்டது. குறித்த நேரத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடிகிறது. விவசாயத்தில் நல்ல வருமானம் கிடைக்கிறது’’ என்கிறார்.

Next Story