சிகரம் தொட்ட சிறுவன்


சிகரம் தொட்ட சிறுவன்
x
தினத்தந்தி 22 April 2018 2:26 PM IST (Updated: 22 April 2018 2:26 PM IST)
t-max-icont-min-icon

உலகிலேயே உயரமான மலைச்சிகரங்களுள் ஒன்றான ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிய சிறுவன் என்ற சாதனையை படைத்துள்ளான் சமன்யு போத்துராஜூ.

லகிலேயே உயரமான மலைச்சிகரங்களுள் ஒன்றான ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிய சிறுவன் என்ற சாதனையை படைத்துள்ளான் சமன்யு போத்துராஜூ. 7 வயதாகும் இவன் ஐதராபாத்தை சேர்ந்தவன். தாயார் லாவண்யா, பயிற்சியாளர் தாமினேனி பாரத் மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த மலையேற்ற குழுவினருடன் சமன்யு சிகரத்தின் உச்சிக்கு சென்றடைந்திருக்கிறான். அவனுக்கு டாக்டர் ஒருவரும் உதவியாக இருந்திருக்கிறார்.

கிளிமஞ்சாரோ சிகரம் கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இந்த உயரத்தை ஐந்து நாட்கள் பயணத்தில் வெற்றிகரமாக எட்டிப்பிடித்திருக்கிறான். அங்கு செல்வதற்கு மோசமான வானிலையும், கால் வலியும், பயமும் தடைக்கற்களாக இருந்திருக்கிறது. எனினும் அவனுக்குள் இருந்த மலையேற்ற ஆர்வம் பயணத்தை வெற்றிகரமாக்கிவிட்டது.

‘‘நாங்கள் சென்றிருந்த நேரத்தில் அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. சாலைகளில் ஆங்காங்கே கற்கள் சிதறிகிடந்தது. பனிக்கட்டிகளும் படர்ந்திருந்தது. சிகரத்தின் உயரத்துக்கு செல்லச் செல்ல எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. நடக்க முடியாமல் கால்களிலும் வலி ஏற்பட்டது. அவ்வப்போது சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பயணத்தை தொடர்ந்தேன். எனக்கு பனிக்கட்டிகள் ரொம்ப பிடிக்கும். அந்த ஒரு காரணம்தான் நான் கிளிமஞ்சாரோவுக்கு செல்வதை சாத்தியமாக்கியது’’ என்கிறார்.

சமன்யுவுக்கு அவனுடைய தாயார் லாவண்யாதான் உந்து சக்தியாக விளங்குகிறார். தினமும் அதிகாலையில் மகனை எழுப்பி அவனுக்கு நடைபயிற்சி வழங்கி வந்திருக்கிறார். மலையேற்ற பயிற்சிகளுக்கும் பழக்கப்படுத்தி இருக்கிறார்.

‘‘என் மகன் படிக்கும் பள்ளியில் மலையேற்ற பயிற்சிக்கு ஊக்குவிக் கிறார்கள். அவனுடைய பயிற்சியாளர் மலையேற்றம் மேற்கொள்வதற்கான எல்லா தகுதிகளும் அவனுக்கு இருப்பதாக கூறினார். இதையடுத்து அவனுக்கு மலையேற்ற பயிற்சி வழங்க தொடங்கினேன். எவரெஸ்ட் சிகரத்தைவிட கிளிமஞ்சாரோவுக்கு மலையேற்றம் செய்வது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என்னால் சில கிலோ மீட்டர் தூரத்திற்கே நடக்க முடிந்தது. அதற்குள் மிகவும் சோர்ந்துபோய்விட்டேன்’’ என்கிறார், லாவண்யா.

இதற்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த கென்னே என்ற சிறுவன் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறியதே உலக சாதனையாக இருந்தது. அவனை விட சமன்யு 3 வயது இளையவன். அதனால் அந்த சாதனை சமன்யு வசம் வந்திருக்கிறது. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிகரங்களில் மலையேற்றம் செய்வதற்கு முடிவு செய்துள்ளான்.

Next Story