ரெயில் நிலையத்தில் தொங்கும் தோட்டம்
ரெயில் நிலையங்களில் விநியோகிக்கப்படும் குடிநீர் பாட்டில்கள் காலியானதும் தண்டவாளங்களில் தூக்கி வீசப்படுகின்றன.
ரெயில் நிலையங்களில் விநியோகிக்கப்படும் குடிநீர் பாட்டில்கள் காலியானதும் தண்டவாளங்களில் தூக்கி வீசப்படுகின்றன. அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்தநிலையில் கேரளாவில் உள்ள ஆலுவா ரெயில் நிலையம் பிளாஸ்டிக் பொருட்களை வித்தியாசமான முறையில் கையாளுகிறது. அங்கு குப்பைகளாக குவியும் பிளாஸ்டிக் பாட்டில்களை அனைவரின் கவனத்தை ஈர்க்கும் அழகு பொருளாக மிளிரவைத்துவிடுகிறார்கள். ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தால் பிளாஸ்டிக் பாட்டில்கள்தான் பயணிகளை வரவேற்கிறது. பிளாஸ்டிக் பாட்டில்களை இரண்டாக வெட்டி அதற்கு சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களில் வண்ணம் தீட்டி அதில் அலங்கார செடிகளை வளர்க்கிறார்கள். சுவர்களில் சீரான இடைவெளியில் வரிசையாக பிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகள் அணிவகுத்திருக்கின்றன. ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தால், அங்கும் தண்டவாள பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தொங்கும் தோட்டங்களாக காட்சி தருகின்றன. தண்டவாளத்தையொட்டி அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்களில் வரிசையாக பிளாஸ்டிக் பாட்டில்களை கட்டி அதில் செடிகளை வளர்க்கிறார்கள். தண்டவாளத்தையொட்டி அமைந்திருக்கும் தடுப்பு சுவர்களும் பிளாஸ்டிக் பாட்டில்களை சுமந்து கொண்டிருக்கின்றன. அதிலும் விதவிதமான செடிகள் தோரணங்களாக வளர்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்டவாளங்களில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை அப்புறப்படுத்துவது ரெயில்வே ஊழியர்களுக்கு பெரும் போராட்டமாக இருந்திருக்கிறது. ரெயில் நிலைய பகுதியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களின் குவியல் அவர்களை மலைக்க வைத்திருக்கிறது. முதலில் அவைகளை சேகரித்து அதில் சில செடிகளை வளர்த்து தண்டவாளத்தில் இருக்கும் குடிநீர் குழாய்களில் தொங்கவிட்டுள்ளனர். அது பயணிகளின் கவனத்தை ஈர்க்க தொடங்கியதும் பெரிய அளவில் அதை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
Related Tags :
Next Story