கம்ப்யூட்டரில் கோலோச்சும் காங்கேயம் காளைகள்
திமிறும் திமில், கூரிய கொம்புகள், ராஜநடை, நேர்கொண்ட கம்பீர பார்வை, சிறிய தலை, பரந்த நெற்றி, அளவான தாடை, சிறிய காதுகள், டிரம் போன்ற உடலமைப்பு இவையே காங்கேயம் இன காளைகளின் தனி அடையாளம்.
திமிறும் திமில், கூரிய கொம்புகள், ராஜநடை, நேர்கொண்ட கம்பீர பார்வை, சிறிய தலை, பரந்த நெற்றி, அளவான தாடை, சிறிய காதுகள், டிரம் போன்ற உடலமைப்பு இவையே காங்கேயம் இன காளைகளின் தனி அடையாளம். 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிலோ எடை கொண்ட பாரத்தை கூட அசராமல் இழுக்கும் திறன் கொண்டவை. எந்த தட்ப வெப்ப சூழ்நிலையையும் தாக்குப்பிடித்து வாழும் தன்மையும் கொண்டவை.
காங்கேயம் காளைகள் வளர்ப்பில் தனி கவனம் பெறும் இடமாக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பழைய கோட்டை விளங்கி வருகிறது. ராவ் பகதூர் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார் தனது அரண்மைனயின் ஒரு பகுதியில் நூற்றுக்கணக்கான காளைகளை வளர்த்து வந்தார். சிறப்புமிக்க காங்கேயம் காளையின் பெருமையை உலகுக்கு அறியச்செய்தவர் இவர். இவரே காங்கேயம் காளைகளை வளர்த்து ஓசூரில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்துக்கு கொடுத்தார். அந்த வழி வந்த காளைகளே ஓசூர் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் இன்றளவும் உள்ளன.
காங்கேயம் மாடுகள் அருகி வந்தாலும் அவற்றை அழியவிடாமல் காக்கும் பணியை ராவ் பகதூர் நல்லதம்பி சர்க்கரை மன்றாடி யாரின் பேரனான ராஜ்குமார் சர்க்கரை மன்றாடியார் செய்து வருகிறார். தனது தாத்தா காலத்தில் இருந்து காங்கேயம் மாடுகளை காணவந்த முக்கிய தலைவர்கள், பிரபல காளைகளின் புகைப்படங்களை அரண்மனையில் இன்றளவும் பாதுகாத்து வருகிறார். அரண்மனையில் வளர்க்கப்பட்ட காங்கேயம் காளைகள் போட்டிகளில் வென்ற பரிசுக்கோப்பைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இவர்களின் குலதெய்வ கோவிலான ஆனூர் அம்மன் கோவிலில் மாட்டுக்காக தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. மாடுகளை அங்கு கொண்டு வந்து பூஜை செய்தால் நலமுடன் இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.
காங்கேயம் மாட்டினத்தை நிறத்தின் அடிப்படையில் மயிலை, பிள்ளை, செவலை, காரி, செம்பூத்து, குர்ரா, காரம்பசு என்றெல்லாம் அழைக்கிறார்கள். மயிலை காளை என்பது சாம்பல் நிறம் கலந்த வெள்ளையுடன் காணப்படும். இதுவே காங்கேயம் இன காளைகளின் முதல் தரமாக பார்க்கப்படுகிறது. இந்த காளைகள் இலங்கை, பிலிப்பைன்ஸ், மலேசியா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கேயும் வளர்க்கப்பட்டு வருகின்றன.
காங்கேயம் இனத்தில் பசுக்களும் உண்டு. இந்த பசுக்கள் ஒரு நாளைக்கு 2 லிட்டர் வரை தான் பால் கொடுக்கும். அதிகபால் தரும் கலப்பின மாடுகள் வருகையால் நாட்டு மாடான காங்கேயம் பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில் தற்போது நாட்டு மாட்டு பாலுக்கு தமிழகத்தில் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காங்கேயம் இன பசுவின் பாலில் ‘லாக்டோபெரின்’ என்ற புரதப்பொருள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாகவும், கால்சியம் சத்து அதிகமாக இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. அதனால் தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் காங்கேயத்துக்கு வந்து காங்கேயம் இன பசுக்களை வாங்கி செல் கிறார்கள். அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் காங்கேயம் மாட்டு இனத்தை மீட்டெடுத்து வாழ்வு கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து தீவனப்பற்றாக்குறை, பராமரிப்பில் உள்ள சிரமம் போன்ற காரணங்களுக்காக இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்யப்படும் காங்கேயம் இன மாடுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் சிவகுமார் என்ற இளைஞர் ஈடுபட்டிருக்கிறார். திருப்பூரில் விஜயாபுரம் என்ற பகுதியை சேர்ந்த இவர், அமெரிக்காவில் எம்.பி.ஏ. எம்.எஸ். படித்துவிட்டு அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பல வருடங்கள் பணியாற்றியவர். அந்த வேலையை உதறிவிட்டு, காங்கேயம் காளைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அவரை சந்தித்தோம்!
‘‘பல ஏக்கர் மேய்ச்சல் நிலத்தையும், நூற்றுக்கணக்கான நாட்டுமாடுகளையும் எங்கள் குடும்பத்தினர் வைத்திருந்தனர். பின்னலாடை தொழில் வளர்ச்சியால் எங்கள் ஊரும் மாறியது. ஆசையாக நாங்கள் வளர்த்த காங்கேயம் மாடு களின் எண்ணிக்கை குறைந்தது. எனது பெற்றோர் விருப்பப்படி அமெரிக்காவில் படித்து விட்டு, அங்கேயே பெரிய நிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருந்தேன். அங்கு என்னுடன் பணியாற்றியவர்கள் அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டனர். ஆனால் எனக்கு உடல்நலக் குறைவு எதுவும் ஏற்பட்டதில்லை. இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுபற்றி சிந்தித்தபோது, பிறந்ததில் இருந்து அமெரிக்கா போகும் வரை காங்கேயம் இன பசுவின் பாலில் தயாரித்த மோர், நெய் போன்ற சத்தான உணவுகளை சாப்பிட்டதுதான் அதற்கான காரணம் என்பதை உணர்ந்தேன்.
இந்தநிலையில் எனக்கு திருமணமாகி மகனும் பிறந்தான். எனக்கு கிடைத்த ஆரோக்கியமான வாழ்க்கை எனது மகனுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். கைநிறைய சம்பளம் வாங்குவதைவிட சொந்த ஊரில் ஆரோக்கியமாக வாழ்வது தான் முக்கியம் என நினைத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினேன். எனது மகனுக்காக காங்கேயம் இன பசு வளர்க்க ஆசைப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சந்தைக்கு சென்றேன். அங்கு காங்கேயம் இன பசுக்கள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 4 பசுக்களை விலை கொடுத்து வாங்கி அவற்றை கொண்டு வந்து வளர்க்கத் தொடங்கினேன். இறைச்சிக்காக பாரம்பரியமிக்க காங்கேயம் பசுக்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.
பாலுக்காகவும் காங்கேயம் பசுவினை வாங்கினேன். அதில் கறக்கும் பாலை என் மகனுக்கு கொடுக்கிறோம். அவன் ஆரோக்கியமாக உள்ளான். அதுபோல் மற்ற குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான பால் கிடைக்கவேண்டும் என்பதற்காக, காடையூரில் கொங்க கோசாலையை உருவாக்கினேன். மாட்டு சந்தைகளுக்கு நான் சென்று நாட்டு மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் விலை கொடுத்து வாங்கி கோசாலையில் வைத்து பராமரித்தேன். பின்னர் நல்லமுறையில் வளர்க்க விரும்பும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் மாட்டை வாங்கிய அசல் விலைக்கே கொடுத்தேன். இதுவரை 2 ஆயிரம் காங்கேயம் காளை, பசுக்களை காப்பாற்றி மற்றவர்களிடம் வளர்ப்பதற்காக கொடுத்துள்ளோம்.
காங்கேயம் காளை, பசுக்களுக்கென்று பழைய கோட்டையில் மாட்டுத்தாவணியை(சந்தையை) தொடங்கினோம். வளர்ப்பதற்கு மட்டுமே மாடுகளை அங்கு விற்கிறோம். இறைச்சிக்காக அங்கு மாடுகளை நாங்கள் விற்பதில்லை. நாட்டு மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் லாப நோக்கமின்றி இதை செய்து வருகிறேன். என் மனைவியும் என்னோடு சேர்ந்து பணியாற்று கிறார். ‘வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு...வியாதிக்கு பூட்டு போடு’ என்ற கொள்கையோடு நாட்டு மாடு பற்றி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறேன். தீவனப்பற்றாக்குறை மற்றும் திடீரென்று வெளியூர் களுக்கு செல்லும்போது நாட்டு மாடுகளை பராமரிக்க முடியாதவர்களின் வசதிக்காக ‘மாட்டு விடுதி’யும் தொடங்கி உள்ளோம்.
காங்கேயம் மாட்டு இனம் சரிவை சந்திக்க நாம்தான் காரணம். முன்பு காங்கேயம், உம்பளச்சேரி, ஆலம்பாடி, செம்மரை என்று மண்ணுக்கேத்த நாட்டு மாடுகளை நம் முன்னோர் வளர்த்து வந்தனர். கறவை மாடு களாகவும், உழவு மாடுகளாகவும் நாட்டு மாடுகள் சிறந்து விளங்கின. பரந்து கிடந்த மேய்ச்சல் நிலங்களும், பருவம் தவறாது பெய்த மழையும் நாட்டு மாடுகளின் பசுந்தீவனங்களுக்கு கைகொடுத்தன. பசுமை புரட்சியின் அறிமுகம் பாரம்பரிய விவசாயத்தை முடக்கியது. வெண்மை புரட்சி என்ற பெயரில் அதிக பால் கிடைக்கும் என்று கூறி அன்னிய மாடுகளை வளர்க்க தொடங்கினார்கள். இதனால் சத்தான பால் கொடுத்த நாட்டு மாடுகள் அடிமாடாகி போய்விட்டன. கலப்பின பசுக்கள் பெருகி விட்டன. அன்னிய மற்றும் கலப்பின மாடுகளின் பெருக்கத்தால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்பு இப்போதுதான் மக்களுக்கு புரியத்தொடங்கியிருக்கிறது. காங்கேயம் இன மாடுகளை காப்பாற்றும் நோக்கத்தில் ‘கொங்கமாடு’ என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளோம். காங்கேயம் மாடுகளை வளர்க்க இணையதளம் மூலமாகவும் நிறைய பேர் தொடர்புகொள்கிறார்கள். கம்ப்யூட்டர் மூலமாக காங்கேயம் மாடுகளின் சிறப்பை ஏராளமானவர்கள் அறிந்துகொண்டிருக்கிறார்கள். இது மிகப்பெரிய விழிப்புணர்வாகும்.
காங்கேயம் காளை, பசுக்கள் மூலமாக கிடைக்கும் ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்தி வர்த்தக ரீதியாக விற்பனை செய்தால் மட்டுமே விவசாயிகள் லாபம் பெற முடியும். சாணத்தை வறட்டி யாக தயார் செய்து கொடுத்தால் அதில் இருந்து விபூதி தயாரிக்க முடியும். அதுபோல் மாட்டு கோமியம் மூலமாக பஞ்சகவ்யம் தயாரித்தும் வழங்கலாம். விபூதி தயாரிப்பு, பஞ்சகவ்யம் தயாரிப்பு பற்றி விவசாயிகளுக்கு இலவச பயிற்சியும் அளித்து வருகிறோம். விவசாயிகள் நாட்டு மாடுகளை எந்தவித பொருளாதார சிரமமும் இல்லாமல் வளர்ப்பதற்கு இதுபோன்ற வருமானம் பெருக்கும் வழி முறைகள் கைகொடுக்கும். காங்கேயம் இன மாடுகளை காப்பாற்றும் வகையில் தமிழக அரசு ஆராய்ச்சி மையம் அமைப்பதாக அறிவித்துள்ளது. அந்த மையம் காங்கேயம் பகுதியில் அமைந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்’’ என்றார், சிவகுமார்.
Related Tags :
Next Story