குளச்சலில் கடலை ரசிக்க சென்ற போது அலையில் சிக்கிய 4 வாலிபர்கள் மீட்பு


குளச்சலில் கடலை ரசிக்க சென்ற போது அலையில் சிக்கிய 4 வாலிபர்கள் மீட்பு
x
தினத்தந்தி 23 April 2018 4:30 AM IST (Updated: 22 April 2018 11:18 PM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் கடலை ரசிக்க சென்ற போது அலையில் சிக்கிய 4 வாலிபர்களை மீனவர்கள் மீட்டனர்.

குளச்சல்,

குமரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக கடல் சீற்றம் நிலவி வருகிறது. குளச்சல் பகுதியிலும் நேற்று கடலில் ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வந்த வண்ணம் இருந்தன. குளச்சல் கடல் பகுதி மிகவும் அழகு மிகுந்த பகுதியாகும். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் கடல் அழகை ரசிக்க செல்வது வழக்கம்.

குளச்சல் மீன்பிடி துறைமுகம் பகுதியில் கடலுக்குள் அலை தடுப்பு சுவர் அமைந்துள்ளது. இந்த தடுப்பு சுவர் மீது நடந்து சென்றால் கடல் அழகை முழுமையாக ரசிக்க முடியும் என்பதால் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிகளவு இங்கு செல்வார்கள். தற்போது, இங்கு கடல்சீற்றம் காரணமாக இந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.


இந்தநிலையில், நேற்று காலையில் 4 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிளில் இங்கு வந்தனர். அவர்கள், கடல் சீற்றத்தை பொருட்படுத்தாமல் கடலை ரசித்தப்படி அலை தடுப்பு சுவர் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அப்போது, கடலில் எழுந்த ராட்சத அலை அவர்களை மோட்டார் சைக்கிளுடன் சுருட்டி கடலுக்குள் இழுத்தது. இதில் அலையில் சிக்கிய 4 பேரும் கடலுக்குள் விழுந்தனர். இதைபார்த்த அந்த பகுதியில் நின்ற மீனவர்கள் விரைந்து சென்று 4 வாலிபர்களையும் போராடி மீட்டனர். அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து, பொதுமக்கள் யாரும் அலைதடுப்பு சுவர் பகுதிக்கு செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story