61 நாள் தடைகாலம் எதிரொலி: மீன்கள் விலை இருமடங்கு உயர்வு


61 நாள் தடைகாலம் எதிரொலி: மீன்கள் விலை இருமடங்கு உயர்வு
x
தினத்தந்தி 23 April 2018 4:15 AM IST (Updated: 23 April 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

61 நாள் மீன்பிடி தடைகாலம் காரணமாக மீன்கள் விலை இருமடங்காக உயர்ந்து உள்ளது.

திருவொற்றியூர்,

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையிலான 61 நாட்கள் மீன்களுக்கான இனப்பெருக்க காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. வங்கக்கடலில் மீன்களின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு இந்த காலகட்டத்தில் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் கடந்த 15-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. கரையோர பகுதிகளில் மட்டுமே மீன்பிடித்து வருகின்றனர்.

இதன் காரணமாக மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வரும் மீன்களின் வரத்து குறைந்து உள்ளது. மீன்பிரியர்களின் தேவைகளை சமாளிக்க வியாபாரிகள், ஆந்திரா மற்றும் கேரளாவில் இருந்து மீன்களை கொண்டுவந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

மீன்பிடி தடைகாலம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுவதால் மீன்களின் விலை இரு மடங்காக உயர்ந்து காணப்பட்டது.

சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் நேற்று காலை மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் எதிர்பார்த்த அளவு வஞ்சரம், வவ்வால், பாறை உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் வரத்து இல்லை. சிறிய வகை மீன்களே விற்பனைக்கு வந்து இருந்தது.

அதனையும் பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கிச்சென்றனர். ஆனால் இறால், கடப்பா, நண்டு உள்ளிட்டவை விற்பனைக்கு வரவில்லை. இதனால் மீன்பிரியர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story