பயன்பாட்டிற்கு திறந்து விட வலியுறுத்தி ரெயில்வே மேம்பாலத்துக்கு மலர்வளையம் வைத்து போராட்டம்


பயன்பாட்டிற்கு திறந்து விட வலியுறுத்தி ரெயில்வே மேம்பாலத்துக்கு மலர்வளையம் வைத்து போராட்டம்
x
தினத்தந்தி 23 April 2018 4:30 AM IST (Updated: 23 April 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

பயன்பாட்டிற்கு திறந்து விட வலியுறுத்தி புத்தூர் ரெயில்வே மேம்பாலத்துக்கு மலர் வளையம் வைத்து முக்குலத்து புலிகள் அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த புத்தூரில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாஞ்சூர் - வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டு சில மாதங்களிலேயே பழுதடைந்தது.

இதையடுத்து அந்த பாலத்தில் வாகனங்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பாலத்தை சீரமைத்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறந்து விட வலியுறுத்தி தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பு சார்பில் பாலத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நூதன போராட்டத்திற்கு நாகை ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.

முன்னதாக தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பினர் மலர் வளையத்தை கையில் ஏந்தியவாறு பாலத்தை விரைந்து சீரமைத்து பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். அதைதொடர்ந்து பாலத்தில் தேங்காய் உடைத்து, ஊது பத்தி ஏந்தி, மலர் வளையம் வைத்து பாலத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதில் இளைஞரணி செயலாளர் சபரி, மாணவரணி செயலாளர் பாண்டி உள்பட தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பினர் கலந்து கொண்டனர். 

Next Story