தேசிய மக்கள் நீதிமன்றம்: 740 வழக்குகளில் சமரச தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றம்: 740 வழக்குகளில் சமரச தீர்வு
x
தினத்தந்தி 23 April 2018 4:00 AM IST (Updated: 23 April 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 740 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டு உரியவர்களுக்கு ரூ.11 கோடியே 39 லட்சம் நிவாரணம் வழங்கப் பட்டது.

கரூர்,

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் கரூர் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி நம்பிராஜன் தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீதிபதி பார்த்தசாரதி, மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் தங்கவேல், முதன்மை சார்பு நீதிபதி மணி, கூடுதல் சார்பு நீதிபதி சத்யதாரா மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 3 அமர்வுகளில் வழக்குகள் நடந்தன. இதில் வங்கி காசோலை வழக்குகள், புரோ நோட்டு வழக்குகள், வங்கி வாராக்கடன், மோட்டார் வாகன விபத்து உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.

சமரச தீர்வு

இதேபோல குளித்தலை கோர்ட்டில் நீதிபதி அகிலாஷாலினி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. கரூர், குளித்தலை கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 339 வழக்குகள் விசாரணைக்காக எடுக்கப்பட்டன. இதில் 740 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டன. மேலும் உரியவர்களுக்கு ரூ.11 கோடியே 39 லட்சத்து 29 ஆயிரத்து 325 நிவாரணம் வழங்கப்பட்டன. 

Next Story