பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்தவர் கைது


பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 23 April 2018 4:00 AM IST (Updated: 23 April 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் பலரிடம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை பாக்குமுடையான்பட்டு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். புதுவை காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகன் தாமஸ் எட்வின்ராஜ்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 45) என்பவர் அறிமுகமானார். தான் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் மற்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருவதாகவும், தன்னிடம் பணம் கொடுத்தால் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் தருவதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய தாமஸ் எட்வின்ராஜ் சரவணனிடம் சிறிது சிறிதாக பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்து கூடுதலாக பணம் தந்துள்ளார். நாளடைவில் ரூ.40 லட்சம் வரை அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் அந்த நபர் பணத்தை சரியாக கொடுக்கவில்லை.

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது அதையும் திருப்பி கொடுக்கவில்லை. மேலும் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதுதொடர்பாக கோரிமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசாரின் விசாரணையில் சரவணன் தமிழகம், புதுச்சேரியில் பலரிடம் இதேபோல் பணம் பெற்று ரூ.2 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

மேலும் அவர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் தீவிரமாக தேடினர். இந்தநிலையில் சரவணன் சென்னையில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சென்னை விரைந்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை புதுவைக்கு அழைத்துவந்து பண மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story