அடிப்படை வசதிகள் இல்லாத வேலூர் டவுன் ரெயில்நிலையம்


அடிப்படை வசதிகள் இல்லாத வேலூர் டவுன் ரெயில்நிலையம்
x
தினத்தந்தி 23 April 2018 4:49 AM IST (Updated: 23 April 2018 4:49 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் டவுன் ரெயில் நிலையம் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. இங்கு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வேலூர்,

ரெயில் பயணம் என்பது பொதுமக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. நீண்டதூர பயணத்திற்கு பொதுமக்கள் ரெயில் பயணத்தையே தேர்ந்தெடுத்து பயணம் செய்து வருகிறார்கள். தற்போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து ரெயில் பயணத்தையே பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்கள் முக்கிய சந்திப்புகளாக உள்ளன. இந்த பாதையில் கன்னியாகுமரியில் இருந்து வடமாநிலங்களுக்கு நூற்றுக்கணக்கான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காட்பாடியில் இருந்து வேலூர், திருவண்ணாமலை வழியாக விழுப்புரத்திற்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

காட்பாடியில் இருந்து விழுப்புரத்திற்கு செல்லும் ரெயில்கள் வேலூரில் உள்ள டவுன் ரெயில் நிலையம் மற்றும் அதன் அருகிலேயே இருக்கும் கன்டோன்மென்ட் ரெயில்நிலையம் வழியாக செல்கின்றன. இதில் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கோட்டைக்கு பின்புறம் அமைந்துள்ள வேலூர் டவுன் ரெயில் நிலையம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் சி.எம்.சி. ஆகியவற்றின் மிக அருகில் இருக்கிறது. இங்கிருந்து தினமும் குறைந்தது 150 பேர் முதல் 200 பயணிகள் வரை ரெயிலில் பயணம் செய்ய வருகிறார்கள். மிகவும் சிறிய கட்டிடத்தில் அமைந்துள்ள இந்த ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் மட்டுமே உள்ளது.

இந்த டிக்கெட் கவுண்ட்டரும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறக்கப்படும். அப்போது இந்த ரெயில்நிலையம் வழியாக செல்லும் ரெயிலில் செல்ல மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். முன்பதிவு வசதி கிடையாது. இதனால் ரெயில்நிலையம் பெரும்பாலான நேரங்களில் வெறிச்சோடியே கிடக்கிறது. ரெயிலில் செல்ல இங்கு வரும் பயணிகள் டிக்கெட் வாங்கிக்கொண்டு ரெயில்நிலையத்தின் நடைமேடைக்கு சென்றால் அங்கு அவர்கள் வெயிலில்தான் நிற்க வேண்டியநிலை உள்ளது. அங்கு மேற்கூரை எதுவும் கிடையாது.

அதேபோன்று தண்ணீர் வசதியும் செய்யப்படவில்லை. இதனால் இங்கு வரும் பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குடிநீர் குழாய் உடைந்து கிடக்கிறது. மேலும் ரெயில்நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தண்ணீர் வசதி செய்யப்படாததால் பயணிகள் அதை பயன்படுத்த முடியாமல் கழிவறை காட்சி பொருளாகவே இருக்கிறது.

அருகில் இருக்கும் கன்டோன்மென்ட் ரெயில்நிலையத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், டவுன் ரெயில் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படாதது பயணிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ரெயில்நிலையம் முன்பு அதிக இடவசதி உள்ளது. இந்த இடத்தை ரெயில்வே நிர்வாகம் வாகன நிறுத்தத்திற்கு டெண்டர் விட்டுள்ளது. இதனால் ரெயில் நிலைய பகுதி வாகன நிறுத்தமாக செயல்பட்டு வருகிறது. இங்கு லாரி, கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. தனியார் கல்லூரி பஸ்களும் இரவில் இங்கு நிறுத்தப்படுகிறது. இதனால் ரெயில்நிலையம் வாகன நிறுத்தம் போன்று காட்சியளிக்கிறது.

எனவே வேலூர் டவுன் ரெயில் நிலையத்தில் கழிவறை, குடிநீர் வசதி, நிழற்கூரை போன்ற அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story